சென்னை: பிரதமர் மோடி நேற்று ( ஏப்ரல்- 8 ) பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்க சென்னை வந்திருந்தார். அப்போது, பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் விளையாட்டு திடலில், மாலை நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு ரூ.3684 கோடி மதிப்பிலான பல்வேறு மத்திய அரசு திட்டங்களை தொடங்கி வைத்தார். இதனால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜகவினர் அந்த விழாவில் பங்கேற்றனர். அப்போது அந்த விழாவில் கலந்துகொண்ட பெண்களை, மதுபோதையில் கூட்டத்தில் இருந்த 3 பாஜக இளைஞசர்கள் கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால், விழாவில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அந்த 3 இளைஞர்களையும் கைது செய்து, பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து, இந்த தகவல் அறிந்து வந்த 100-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் பல்லாவரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சிறுவர்களை கைது செய்ததற்கான காரணம் மற்றும் விசராணை என்ற பெயரில் காவல் துறையினர் இளைஞர்களை தாக்கியதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தகவலறிந்து துணை ஆணையர் அதிவீர பாண்டியன் காவல் நிலையத்திற்குச் சென்றார். அப்போது, அவரை சுற்றி வளைத்த பாஜகவினர், காவல் துறையினர் இளைஞர்களை தாக்கியது குறித்து விளக்கமளிக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த துணை ஆணையர் அதிவீரபாண்டியன், காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவல் துறையினரையும் வெளியேறும்படியும் தானே விசாரனை செய்வதாகவும் தெரிவித்து அனைவரையும் வெளியேற்றினார்.
பின்னர், அந்த மூன்று இளைஞர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்திய துணை ஆணையர் அதிவீர பாண்டியன், அவர்கள் மூவரும் 18 வயது பூர்த்தி அடையாதவர்கள் என்பதால், அவர்களிடம் மீண்டும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என அறிவுரை கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.
இதையும் படிங்க: அதிமுக மாஜி எம்.பி மைத்ரேயன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்!