சென்னை : தமிழ்நாடு பாஜகவின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளின் அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் மாவட்டத் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி , மாநிலத் தலைவர் எல்.முருகன் ஆகியோர் தலைமையில் சென்னை, அண்ணா நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கட்சியின் மாநில நிர்வாகிகள் இல.கணேசன், எச்.ராஜா, கே.டி.ராகவன், எம்.என்.ராஜன், நாகேந்திரன், கரு.நாகராஜன் பொறுப்பாளர், அமைப்பாளர், மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தின்போது, நடிகர் சுப்பு பஞ்சு அருணாச்சலம், தொழிலதிபர் ராஜசேகர், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலர் பிரசன்னா அழகர்சாமி, அமமுக மாநில மகளிரணி துணைச்செயலர் பத்மாவதி, காங்கிரஸ் கட்சி திருச்சி மாவட்ட செயலர், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சிவராமகிருஷ்ணன், திமுகவின் ஒன்றிய கவுன்சிலர்கள், பல்வேறு ஊராட்சிமன்றத் தலைவர்கள், முன்னாள் அரசு அலுவலர்கள் எனப் பலரும் கட்சியில் இணைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் எல்.முருகன், பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய எல்.முருகன், "திமுக மக்களை ஏமாற்றுவதை வாடிக்கையாகக் கொண்டு இரட்டை நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. சமூக நீதி பற்றிப் பேச திமுகவிற்கு அருகதை இல்லை. பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மத்திய அரசு நிறுத்தியதாக திமுக கூறுகிறது. ஆனால், 59 ஆயிரம் கோடி மதிப்பில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு பிரதமர் மோடி உதவித்தொகை அறிவித்துள்ளார். வேளாண் திருத்தச்சட்டங்கள் தொடர்பாக விவசாயிகள் மத்தியில் திமுகவினர் தவறான பரப்புரையை கொண்டு செல்கின்றனர்
திமுக முரசொலி அலுவலகத்தின் மூலப்பத்திரத்தை வெளியிடாமல் நீதிமன்றம் சென்று தடையாணை வாங்க வேண்டிய அவசியம் என்ன? இது தொடர்பாக எத்தனை வழக்குகள் போட்டாலும் பயமில்லை. திமுக வழக்கு போட்டு என்னை மிரட்ட முடியாது. இதற்காக தூக்குமேடைக்கு செல்லவும் நான் தயாராக உள்ளேன்” என்றார்.
இதையடுத்து பேசிய சி.டி.ரவி, "தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் பிரதமர் மோடி. முதலமைச்சர் வேட்பாளர் குறித்த முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பிறகே தேசிய ஜனநாயகக் கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அறிவிக்கும்.
வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றிபெற்ற பின்னர், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக அமைக்கப்பட்டுள்ள கமிட்டி தமிழ்நாடு முதலமைச்சர் யார் என்பதை தெரிவிக்கும்" என்று திட்டவட்டமாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆட்சியை விட்டுவிடக்கூடாது என்ற பதவி வெறியில் முதலமைச்சர் உள்ளார் - கனிமொழி தாக்கு