சென்னை: தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் கே.டி.ராகவனின் ஆபாச காணொலியை சமீபத்தில், பாஜக சார்பு நிலை ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் வெளியிட்டார். இந்தக் காணொலியை வெளியிடுவதற்கு, பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையும் ஒப்புதல் வழங்கியதாகவும் மதன் ரவிச்சந்திரன் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து கே.டி.ராகவனின் ஆபாச காணொலியை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரனின் யூ-ட்யூப் பக்கம் முடக்கம் செய்யப்பட்டது.
பின் மதன் ரவிச்சந்திரனை,பாஜகவின் மாநிலத்தலைவர் கே.அண்ணாமலை அதிரடியாக நீக்கி அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து மதன் ரவிச்சந்திரன் 40 நிமிட ஆடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அண்ணாமலை போலி சிங்கம்; கே.டி.ராகவன் குறித்து வீடியோவை வெளியிடச்சொன்னதே அண்ணாமலை தான் என்றும், அப்போது வீரமாகப் பேசிவிட்டு இப்போது பம்முகிறார் எனவும் ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பாஜக தமிழ்நாடு தலைவர் கே. அண்ணாமலை தொடர்பாக, ஊடகவியலாளர் மதன் இன்று வெளியிட்ட ஆடியோ ட்ரெண்ட் ஆகி, அவரது அரசியல் வாழ்க்கையில் சிக்கலை உருவாக்கியிருக்கிறது.
இவ்விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கே.அண்ணாமலை பட்டும்படாமல் கருத்து பதிந்துள்ளார். அவை, ' மூன்று விஷயங்கள் என்னை எப்போதும் வழிநடத்தும். அது தான் என்னை இனியும் வழிநடத்தும்
- வருங்காலத்தில் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க வேண்டும் என்னும் தொலைநோக்குப் பார்வையில் எனது சிறுபங்கும் பணியும் இருக்கும்.
- எண்ணற்ற மக்களின் தியாகத்தினால் உருவாகிய இந்தப் பெரிய கட்சியின் எளிய 'தொண்டர்' என்ற பெருமை
- எங்கேயும் எப்போதும் எனக்கு தேசப்பணிதான் முதன்மையானது' என கே.அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போலி சிங்கம் - மதன் ரவிச்சந்திரன் விமர்சனம்