சென்னை: சென்னையில் கடந்த மார்ச் 17ஆம் தேதி நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ''அதிமுக உடன் கூட்டணி அமைத்தால், பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சாதாரணத் தொண்டனாக கட்சிப் பணி செய்வேன்" எனப் பேசியிருந்தார். அண்ணாமலையின் இந்த கருத்திற்கு பாஜகவில் இருந்தே எதிர்ப்புக் கிளம்பியது.
அதேநேரம் அதிமுகவினரும் அண்ணாமலையின் கருத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த நிலையில் சௌராஷ்டிரா தமிழ் சங்கத்தின் விழா இன்று (மார்ச் 19) சென்னையில் நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, ''கூட்டணி குறித்து பேசுவதற்கு எனக்கு தற்போது எந்த அதிகாரமும் இல்லை. அது குறித்து நேரம் வரும்போது பாஜக மாநிலத் தலைவர் என்ற முறையில் நான் பேசுகிறேன்.
கிளீன் பாலிடிக்ஸ்க்கு (Clean Politics) அச்சாரமாக இருப்பது பணம் கொடுக்காமல் வாக்கை பெறுவது ஆகும். ஆனால், தமிழ்நாட்டில் பணம் கொடுக்காமல் தேர்தலைச் சந்திக்க முடியாது என்ற நிலை வந்து விட்டது. தேர்தலுக்குப் பணம் செலவு செய்யும் அரசியலில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் எந்த அரசியல் கட்சிக்கும், அரசியல் தலைவருக்கும் எதிரி அல்ல. எனது கருத்துக்கு 50 சதவீதம் பேர் உடன்படுகின்றனர், 50 சதவீதம் பேர் எதிர்க்கின்றனர்.
நேர்மையான அரசியல் வர வேண்டும் என்பதற்கான அச்சாரமாக 2024 தேர்தல் இருக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், நேர்மையான அரசியலை எதிர்பார்க்கின்ற நேரம் வந்துவிட்டது. இரண்டு வருடம் தேர்தல் அரசியலைப் பார்த்த பின்பு, இந்த உறுதியான நிலைப்பாட்டிற்கு வந்திருக்கிறேன். இப்படியே சென்று கொண்டிருந்தால், தமிழ்நாட்டில் 1,000 ஆண்டுகள் ஆனாலும் மாற்றம் என்பது வராது.
காவல் அதிகாரியாக சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தை அரவக்குறிச்சி தேர்தலில் செலவு செய்தேன். சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தை தேர்தலில் செலவு செய்து விட்டு, தற்போது கடன்காரனாக இருக்கிறேன். தமிழ்நாட்டில் தற்போது உள்ள சூழலில், ஒரு நாடாளுமன்ற தேர்தலைச் சந்திக்க 80 கோடியில் இருந்து 120 கோடி ரூபாய் வரை செலவு ஆகும். பணம் கொடுத்து விட்டு, மாற்றம் என்று கூறும் தகுதியை இழந்து விடுகிறோம். செலவு செய்த பணத்தை எம்.பி. நிதியில் இருந்து கமிஷனாக எடுக்க முடியுமா?
எங்கள் தரப்பு வேட்பாளருக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறும்போது, அதற்கு என்று ஒரு வாக்கு வங்கி இருக்கிறது. இது போன்றுதான் அரசியலில் என்னுடைய பயணம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இதை மாற்றித்தான் அரசியலில் பயணிக்க முடியும் என்று இருந்தால், அப்படிபட்ட அரசியல் எனக்குத் தேவையில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாஜக தனித்து போட்டியிட விருப்பம்.. அண்ணாமலை பேச்சின் பின்னணி என்ன?