சென்னை: தமிழ்நாடு பாஜகவின் தலைவராக அண்ணாமலை ஐபிஎஸ் இன்று கமலாலயத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "பாஜக மாநில முன்னாள் தலைவர் எல். முருகன் நான்கு எம்எல்ஏக்களை சட்டப்பேரவைக்கு அனுப்பியுள்ளார். அதற்கு அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு கட்சியைக் கொண்டுசெல்வேன்.
நீட் வரப்பிரசாதம்
திமுக ஆட்சிக்கு வந்து இதுவரை எந்தத் தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. என்னைப் போன்ற விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்கள், எல். முருகனைப் போன்ற ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு நீட் தேர்வு வரப்பிரசாதமாக இருக்கிறது.
மேலும், எந்தக் கமிட்டி போட்டு இருந்தாலும் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று நீட் நல்லது என மக்களிடம் எடுத்துக் கூறுவோம். மத்திய அரசு தடுப்பூசி தரவில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். 96 கோடி டோஸ் தடுப்பூசியை மத்திய அரசு ஆர்டர் செய்திருக்கிறார்கள்.
ஊடகங்களின் மீது நம்பிக்கை
தமிழ்நாடு, இந்திய ஊடகங்களின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளது பாஜக. ஐ.டி. சட்டம் குறித்து நான் பேசியதை ஊடகம் குறித்து பேசியதாகத் தவறாகச் சித்திரிக்கிறார்கள். 37 வயதில் தலைவர் பதவி கிடைத்துள்ளது. மூத்தத் தலைவர்களை அனுசரித்துச் செயல்படுவேன்.
ஒரு குடும்பம், ஒரு தலைவர் என மற்ற கட்சியைப் போல் கிடையாது பாஜக. கடைக்கோடியில் இருக்கும் ஒரு மனிதனுக்கு பாஜக கொடுக்கும் அங்கீகாரம்தான் உண்மையான சமூகநீதி.
என் உயிர்மூச்சு இருக்கும் வரை...
மேகதாது அணை விவகாரத்தில் கட்டக் கூடாது என்பதே பாஜகவின் நிலைப்பாடு. தமிழ்நாடு உழவர்களுக்கு ஆதரவாகத் தான் இருப்பேன். என் உயிர்மூச்சு இருக்கும்வரை தமிழ்நாட்டிற்குப் பாடுபடுவேன்.
பிரிப்பது எங்கள் நோக்கம் அல்ல
கொங்குநாடு விவகாரத்தில் நான் உணர்ச்சிவய அரசியல் பண்ணவில்லை, பாஜக நிலைப்பாடு பிரிப்பது இல்லை. மாவட்ட பாஜக சார்பில் தீர்மானம் நிறைவேற்றியது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'வரும் தேர்தலில் 150 இடங்களில் பாஜக வென்று ஆட்சிக் கட்டிலில் அமரும்!'