'பிரதமர் பாதுகாப்பு குறைபாடு, திட்டமிட்ட சதி'- அண்ணாமலை! - BJP TN state president Annamalai Addressing press conference in chennai
பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகள், போராட்டங்கள் திட்டமிட்டது. அதில் வெளிநாட்டு சதியும் உள்ளது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

சென்னை: தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த நிலையில், சென்னை தி-நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டிற்கு பொங்கல் பரிசாக 11 புதிய மருத்துவக் கல்லூரிகளைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். இதன் மூலம் 1,450 மருத்துவ இடங்கள் நடப்பு ஆண்டிலே கிடைக்க உள்ளன.
அந்த வகையில், தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறந்து வைத்து சாதனை படைக்கப்பட்டுள்ளது, இதுவரை எந்த ஒரு மாநிலத்திலும் நடைபெறாத ஒன்று.

தனியார் செய்தி நிறுவனமான இந்தியா டுடே சார்பில் பஞ்சாபில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு குளறுபடி தொடர்பாகக் கள ஆய்வை செய்து செய்தி வெளியிடத்தில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதில் பஞ்சாபில் பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகள் மற்றும் போராட்டங்கள் திட்டமிட்டது அதோடு வெளி நாட்டுச் சதியும் உள்ளது.

பாகிஸ்தான் எல்லையில் இருந்து சுமார் 10 கி.மீ தூரத்திற்குப் பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டன. பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடிக்கு நிகழ்ந்த பாதுகாப்பு குறைபாட்டில் பஞ்சாப் அரசின் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகம் வர அதற்கு அவர்கள் கூறும் பொய்களே காரணமாக அமைகின்றன” என்றார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் நீட் விலக்கு கோரிக்கை விடுத்துள்ளது குறித்த கேள்விக்கு, “மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினிடம் போன் செய்து தேர்தல் நேரத்தில் பேசிய கம்பசூத்திர ரகசியம் என்ன என்று கேட்க வேண்டும். பிரதமரிடம் என்ன கோரிக்கை வேண்டுமானாலும் முதலமைச்சர் வைக்கலாம் அதற்கு முதலமைச்சருக்கு அனைத்து உரிமையும் உள்ளது” என்று பதிலளித்தார்.

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு துறையை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என ஹெச்.ராஜா கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு, “அது அவரின் தனிப்பட்ட கருத்து. மாநில காவல்துறை எப்பொழுதுமே மாநில அரசிடம் தான் இருக்கவேண்டும். மாநில பிரச்சினைகள் மாநில அரசிற்கே தெரியும் என்ற அவர் தமிழ்நாடு காவல்துறை மீது பாஜக எப்போதும் நம்பிக்கை வைத்துள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் கருத்துச் சுதந்திரம் கேள்விக்குள்ளாகி உள்ளதாகவும், தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசில் குளறுபடி உள்ளது, எனவும் அரிசி சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் தரம் இல்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள் என்றார்.
பிரபல ரவுடி படப்பை குணா பாஜகவில் இணைகிறாரா? என்ற கேள்விக்கு காவல்துறையால் தேடப்படும் எந்தக் குற்றவாளிக்கும் பாஜகவில் இடமில்லை எனவும் பொன். ராதா கிருஷ்ணனை குணா மனைவி சந்தித்தது குறித்து அவரிடம் கேட்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வேண்டும் - மோடியிடம் ஸ்டாலின் கோரிக்கை
இதையும் படிங்க: மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் ஸ்டாலின் மனு
TAGGED:
annamalai bjp