பாஜகவினரின் வேல் யாத்திரைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்தத நிலையில் தடையை மீறி பாஜக மாநில தலைவர் எல்.முருகன் திறந்த வேனில் பாஜக யாத்திரையை கோயம்பேட்டிலிருந்து தொடங்கினார்.
கோயம்பேடு, மதுரவாயல், வேலப்பன்சாவடி, பூவிருந்தவல்லி வழியாக வந்த வெற்றிவேல் யாத்திரையானது பூவிருந்தவல்லி - திருமழிசை கூட்டு சாலையில் திரும்பும்போது கைது செய்வதற்காக 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் இரும்பு தடுப்புகள் அமைத்திருந்தனர். ஆனால், பாஜகவினர் அந்த தடுப்புகளை மீறி வெற்றிவேல் கோஷமிட்டபடி அங்கிருந்து சென்றனர்
இதில் வெற்றிவேல் யாத்திரைக்கு பாஜக தலைவர் முருகனோடு சேர்த்து 10 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டது. அதனை பின்தொடர்ந்து வந்த பாஜக நிர்வாகிகளின் வாகனங்கள் அங்கேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
இதனால் காவல் துறையினருக்கும், பாஜகவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினரின் தடுப்புகளை மீறி பாஜக யாத்திரையானது சென்றது. இதையடுத்து, தான் சாமி கும்பிடுவதற்காக மட்டுமே செல்வதாக கூறியதால் பாஜக தலைவர் முருகனை காவல் துறையினர் அனுமதித்தனர்.
மேலும், திருத்தணியில் சாமி தரிசனம் முடித்துவிட்டு யாத்திரையை தொடங்கினால் அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே யாத்திரை வாகனத்துடன் வந்த பாஜகவினர் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், காவல் துறையினருக்கும், பாஜகவினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து களைந்துசெல்ல மறுத்த பாஜகவினர் 15 பேரை காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ”வேல் யாத்திரையின் நோக்கமே மதக்கலவரத்தை உருவாக்குவதுதான்” - முதலமைச்சர் தாக்கு