சென்னை : சென்னை செம்பியம் பகுதியில் சுவர்ணலட்சுமி என்ற பெயரில் தனது குடும்பத்துடன் இணைந்து கடந்த 20 ஆண்டுகளாக நிதி நிறுவனம் நடத்தி வருபவர் வி.எஸ். சீனிவாசன். இவர், பெரம்பூர் பாஜக வர்த்தக அணி பிரிவு தலைவராகவும் இருந்து வருகிறார். தற்போது, வடசென்னை மாவட்ட தேர்தல் பொறுப்பாளராகவும் உள்ளார்.
பெரம்பூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பலர் சீனிவாசன் நடத்திவரும் நிதி நிறுவனத்தில் சீட்டு கட்டி வந்தனர். இது மட்டுமில்லாமல் சீனிவாசன் பலருக்கு கந்துவட்டி முறையில் பணம் அளித்து வந்ததாகவும், குறிப்பிட்ட தேதியில் வட்டி கொடுக்க தவறினால் சீனிவாசன் அடியாட்களை அனுப்பி மிரட்டி பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் பொதுமக்கள் கட்டிய சீட்டு பணத்தை குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் இருந்ததால் சீனிவாசன் நடத்தி வரக்கூடிய நிதி நிறுவனத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பணத்தை கேட்டு தொந்தரவு கொடுத்து வந்தனர். இதனால், திடீரென்று சீனிவாசன் தனது நிதி நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
70 லட்சம் ரூபாய்வரை மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருந்து வரக்கூடிய சீனிவாசன், அவரது குடும்பத்தினரை கைது செய்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட பெரம்பூரைச் சேர்ந்த தனசேகரன், மயிலாப்பூரைச் சேர்ந்த பரணி ஆகியோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாகி இருந்த பாஜக பிரமுகர் சீனிவாசன், அவரது மனைவி கனக துர்கா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சேலத்தில் சாலைகளைச் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை