புதுக்கோட்டை: பாஜக சிறுபான்மை பிரிவு தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் இன்று (ஜூன் 9) புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் "கடந்த 15 தினங்களுக்கு முன்பு எனது சமூக வலைதள பக்கத்தில் என்னையும், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரையும் விரைவில் கொலை செய்வோம் என்று பதிவிடப்பட்டிருந்தது.
இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு புகார் மனு நானே நேரடியாக சென்று அழைத்தேன். ஆனால் மனு மீது நகர காவல் நிலைய போலீசார் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை உடனடியாக இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவிடம் அளித்த மனுவில் அவர் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதி அளித்தார்.
அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம், "பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆகியோரை கொலை செய்து விடுவதாக சமூக வலைதளத்தில் மிரட்டல் விடுத்தவர்கள் மீது காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. காவல்துறை ஏவல் துறையாக மாறி உள்ளது. ஆளுங்கட்சியின் கைப்பாவையாக காவல்துறை மாறிவிட்டது.
திமுகவிற்கு எதிராக பாஜக பிரமுகர்கள் ஏதாவது பதிவிட்டால் உடனடியாக அவர்களை கைது செய்யும் தமிழக காவல்துறை, பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் தன்னையும் கொலை செய்து விடுவதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டவர்கள் மீது இதுவரை ஏன் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை?. இதிலிருந்தே காவல்துறை ஒருதலைப் பட்சமாக நடந்து வருகிறது என்பது வெட்ட வெளிச்சம் ஆகிறது.
திமுக ஆட்சியில் கஞ்சா கொடி கட்டி பறக்கிறது போதை பொருட்கள் தாராளமாக புழக்கத்தில் உள்ளது என்று தமிழக முதல்வர் உரிய கண்காணிப்பை செய்ய வேண்டும் என்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் திமுக ஐடி விங் பக்கத்தில் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததோடு வீச்சறிவாளை கையில் வைத்துக்கொண்டு போஸ் கொடுத்து புகைப்படம் பதிவிடுகின்றனர்.
அதனை முதல்வருக்கும் டேக் செய்துள்ளனர். இதன் பிறகும் காவல்துறை அங்கு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. பயங்கரவாதிகளுக்கும், திமுக பிரமுகர்களுக்கும் காவல்துறை பக்க பலமாக உள்ளது என்பதை இது காட்டுகிறது. ஆளுநர் தமிழகத்தின் முதல் குடிமகன். தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் தமிழகத்தின் முன்னேற்றம் குறித்து அவர் நிச்சயமாக பேசுவார் கருத்து கூறுவார்.
திமுக ஊழல் நிறைந்த கட்சி. பல இடங்களில் சாராயத்தின் பேரில் படுகொலை நடக்கிறது கள்ளச்சாராயம் நடந்து கொண்டிருக்கிறது. விஷ்ணு பிரியா என்ற ஒரு மாணவி மிகப்பெரிய அளவிற்கு ஆசையோடு இருந்தவர். தன்னுடைய தந்தை குடிகாரராக மாறிவிட்ட காரணத்தால் வருத்தப்பட்டு, தான் இறந்த பிறகாவது முதல்வர் சாராயக்கடையை மூடுவாரா? என்பது போன்ற கடிதத்தை எழுதி வைத்துள்ளார்.
அனிதாவிற்காக மிகவும் ஆக்ரோஷப்பட்ட ஸ்டாலின், விஷ்ணு பிரியாவிற்காக மதுக்கடைகளை மூடுவாரா? ஆளுநர் திமுக செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டுகிறார். அதனாலேயே முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு எதிராகவும், திமுக நிர்வாகிகள் ஆளுநரை கண்டித்தும் பேசி வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. ஆளுநர் இந்த மாநிலத்தின் முன்னேற்றத்திற்காகவும் பேசியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முன்னேறி கொண்டுள்ளது என்று கூறியுள்ளார். இதற்கு யாரும் திமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் தமிழக அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டினால் உடனடியாக ஆளுநரை எதிர்க்கின்றனர். விமர்சனங்களை எதிர்கொள்ளும் மனநிலை முதல்வருக்கும், திமுக நிர்வாகிகளுக்கும், அமைச்சர்களுக்கு இல்லை.
தீவிரவாதிகளின் கூடாரமாக இருந்த காஷ்மீரையே மாற்றி பிரதமர் வளமிக்க பகுதியாக மாற்றியுள்ளார். காஷ்மீரில் உள்ள இஸ்லாமியர்கள் பொருளாதாரத்தில் முன்னேறி உள்ளனர். சுற்றுலாப் பயணிகள் தற்போது அதிக அளவு வருகின்றனர். காஷ்மீருக்கு கடந்த காலங்களில் 56 லட்சங்கள் மக்கள் மட்டுமே வருடத்திற்கு சுற்றுலா பயணிகளாக செல்வார்கள்.
ஆனால் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 76 லட்சம் பேர் சுற்றுலா பயணிகளாக காஷ்மீருக்கு சென்றுள்ளனர் என்றால் ஆர்டிகிள் 370 திரும்ப பெற்றதால் தான். சிறுபான்மை மக்களுக்காக நலத்திட்டங்கள் பள்ளிகள் ஆகியவற்றை கட்டுவதற்கு மத்திய அரசு இந்த ஆண்டு தமிழகத்திற்கு 313 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
ஆனால் இதில் ஒரு ரூபாய் கூட தமிழக அரசு இதுவரை செலவு செய்யவில்லை. அதை அப்படியே திருப்பி அனுப்புவதற்கு முயற்சி செய்து வருகிறார். சிறுபான்மையினர் மீது அக்கறை உள்ள முதல்வராக இருந்தால் மத்திய அரசு இந்த ஆண்டு ஒதுக்கிய 313 கோடி ரூபாயை தமிழக அரசு செலவு செய்து சிறுபான்மையினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: Train Accidents: ஜூன் 2 முதல் 9 வரை இந்தியாவில் நிகழ்ந்த ரயில் விபத்துகள்!