சென்னை: மாநகராட்சியின் பிப்ரவரி மாதத்துக்கான கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று (பிப்.28) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த 16-ம் தேதி மறைந்த 122-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஷீபா வாசு மறைவுக்கு இரங்கல் தீர்மானத்தை மேயர் பிரியா ராஜன் வாசித்தார். இதைத் தொடர்ந்து, மாமன்ற உறுப்பினர்கள் இரங்கல் தீர்மானம் வாசித்தனர்.
அப்போது பேசிய மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்த், "கடந்த முறை காங்கிரஸ் உறுப்பினர் இறந்தபோது இரங்கல் தெரிவிக்க எங்களுக்கு வாய்ப்புத்தரவில்லை என நாங்கள் கேட்டோம். அதற்குள் இன்னொருவர் இறந்துவிட்டார். இனி மேல் நான் வாய்ப்பு கேட்க மாட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள். இனி இதுபோன்ற இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வு நடக்காமல் இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
நான் ஷீபா வாசுவிடம் பழகியது குறைவான காலம் என்றாலும், எனக்கு மிகுந்த வருத்தம் தருகிறது. திராவிடக் கொள்கை மீது அவர் வைத்திருந்த பற்று வெளிப்படையாகத் தெரியும். அவரது குடும்பத்தினருக்கு மாநகராட்சி உதவ வேண்டும் என மனப்பூர்வமாக கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து பேசிய மேயர் பிரியா ராஜன், "மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவியில் இருக்கும் போது உயிரிழந்தால், அவரது குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய துணை மேயர் மகேஷ் குமார், "மாமன்ற உறுப்பினர்கள் பதவிக்காலத்தில் இருக்கும்போது உயிரிழந்தால் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்பதை சிறப்பு தீர்மானம் மூலமாக ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்" என கேட்டுக் கொண்டார். துணை மேயரின் கோரிக்கை, முதலமைச்சரின் சிறப்பு கவனத்துக்கு எடுத்து செல்லப்படும் என மேயர் பிரியா உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து, மார்ச் 2-ம் தேதிக்கு மாமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.
இதையும் படிங்க: 150 ஆண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் நூலகத்தில் ஒப்படைப்பு