சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனம் எல்லாம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும் என்பதில் உள்ளது என்று பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள கைலாஷ் திருமண மண்டபத்தில், தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி பாஜக செயல்வீரர்கள் கூட்டம், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது, “முதல்வரின் கவனம் எல்லாம் ஆட்சியில் இல்லை. அவரது கவனம் அனைத்தும் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக கொண்டு வந்து, முதல்வராக்குவதில்தான் இருக்கிறது.
திமுகவைப் பொறுத்தவரை, மிக எளிதாக முடிவுகளை எடுக்க முடியவில்லை. அறிவாலயத்தில் ஒரு நிமிடத்தில் முடிவெடுத்து, அதை தொண்டர்களுக்கு இரண்டு நிமிடத்தில் சொல்லி, தொண்டர்கள் அதை மூன்று நிமிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள். இப்படித்தான் அறிவாலயத்தில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. காரணம், இங்கு ஒரு குடும்பம் மட்டும் ஆட்சியில் இருக்கிறது.
எங்கு எல்லாம் செல்ல முடியாது என கூறினார்களோ, அங்கு எல்லாம் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. பதவிக்காக சண்டையிட்டு வரும் வேளையில், தங்கள் பதவிக் காலம் முடிந்தவுடன், புதிய நபர்களை முதல்வராக தேர்ந்தெடுக்கும் முயற்சியில் பாஜக செயல்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் முக்கியமான திட்டங்களை நோக்கி உழைத்து, முழுமையாக வளர்ந்த நாடாக இந்தியா மாறியிருக்கும் நிலை உருவாகியுள்ளது.
2047ஆம் ஆண்டு உலகின் பெரிய நாடாக இந்தியா நிச்சயம் மாறும். நாடு முழுவதும் தனி மனிதர் வருமானத்தை இரட்டிப்பு ஆக்கியுள்ளோம். பாஜக 2026ஆம் ஆண்டு தயாராகிவிட்டது என்பதற்கு முக்கியமான தேர்தலாக நாடாளுமன்றத் தேர்தல் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவு திறந்தே உள்ளது.
சென்னையின் வளர்ச்சி குறைந்துள்ளது. இந்தியாவின் தூய்மையான நகரம் பட்டியலில் 43வது இடத்தில் இருந்த சென்னை, 199வது இடத்திற்கு மாறியுள்ளது. திருச்சி 112வது இடத்தில் உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் என எவரும் பணியாற்றவில்லை என்பதால், சென்னை வளர்ச்சி இல்லாமல் தவித்து வருகிறது. இந்தியாவின் மிக முக்கிய நகரமாக உள்ள சென்னை, நம் கண் முன் அழிகிறது. திமுகவை பொறுத்தவரை, ஒரு சினிமா கம்பனி நடத்துவது போல செயல்படுகிறார்கள்.
இதையும் படிங்க: பொங்கல் தினங்களில் ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் சேவை!