இது குறித்து அவரது அறிக்கையில், "கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஏற்படும் தண்ணீர்ப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு இத்திட்டம் மூலம் நிரந்தரத் தீர்வு காண முடியும்.
சமீபத்தில் நடைபெற்ற நதிநீர் இணைப்புக்குத் திட்டக் குழுக் கூட்டத்தின் முடிவில் கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தும் விரிவான திட்ட அறிக்கையை தெலங்கானா, ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய தொடர்புடைய மாநிலங்களுக்கு அனுப்பிவைத்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு 100 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு உறுதி
தெலங்கானா மாநிலம் இச்சம்பள்ளியிலிருந்து கல்லணை வரை 1,165 கிலோ மீட்டர் தூரத்திற்கு திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிடப்படுகிறது. 86 ஆயிரம் கோடி ரூபாயிலான இத்திட்டத்தைச் செயல்படுத்தி நிறைவேற்றுகிறபோது தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு 100 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு உறுதிசெய்யப்படுகிறது. பிரதமர் மோடி தமிழ்நாடு மக்களின் மீது கொண்டுள்ள பாசத்தால் இத்திட்டம் குறித்த ஆய்வுகளைத் தொடர்ந்து நடத்திவருகிறார்.
திட்டத்திற்காக பிரதமரிடம் வலியுறுத்திய எடப்பாடி
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை நேரில் சந்தித்து தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கைவைத்தார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் கடந்த ஆண்டே திட்டத்துக்கான மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுத் தருவேன் என்று கூறியிருந்தார். அதன்படி இப்போது மத்திய அரசு தேசிய நீர்வள மேலாண்மை முகமை விரிவான திட்ட அறிக்கை தயார்செய்து தொடர்புடைய மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் மகிழ்ச்சி
தமிழ்நாடு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி இது. இந்த வாய்ப்பைத் தமிழ்நாடு அரசு பயன்படுத்தித் தமிழ்நாட்டின் நீர் தட்டுப்பாட்டைப் போக்கும்விதமாக இருக்க வேண்டிய தீவிர முயற்சிகளை எடுக்க வேண்டும். இதற்காக குழு அமைப்போம், ஆராய்ச்சி செய்வோம் என்று திட்டத்திற்கு எதிர்மறையாகச் சிந்திக்காமல் தமிழ்நாட்டின் மீது உண்மையான அக்கறை கொண்டு செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மக்களின் உரிமையை நிலைநாட்டித் தந்தது பிரதமர் மோடி
இதுபோன்ற திட்டங்களுக்கு வழக்கமாக மத்திய அரசு ஒதுக்கிய நிதியைவிட கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டத்துக்கு கூடுதல் நிதியை ஒதுக்கிட மத்திய அரசு முன்வந்தது. மேலும் மகிழ்ச்சிக்குரியதாகும். ஏற்கெனவே காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை அமைத்துத் தமிழ்நாடு மக்களின் உரிமையை நிலைநாட்டித் தந்தது பிரதமர் மோடிதான்.
அதேபோன்று இப்போது காவிரி டெல்டா விவசாயிகள் மட்டுமன்றி தமிழ்நாட்டு மக்களின் குடிநீர் ஆதாரத்திற்கும், நீர் பாசனத்திற்கும் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வாய்ப்பை உபயோகிக்க கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை ஏற்றுச் செயல்படுத்த நடவடிக்கை தொடங்கியுள்ளது பிரதமர் மோடிதான். தமிழ்நாடு மக்களின் சார்பாக அவருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.