சென்னை: பாஜக ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் கடந்த 31ஆம் தேதி நடந்த முத்துராமலிங்கத்தேவர் குரு பூஜையைப்பற்றி சில தினங்களுக்கு முன்பு, அவரது ட்விட்டர் பக்கத்தில் சில தகவல்களைப் பதிவிட்டு இருந்தார். அதில் மாநில அரசு சரியான பாதுகாப்பு வழங்காததால் தான் பிரதமர் மோடி தேவர் குருபூஜையில் கலந்து கொள்ளவில்லை எனக் குறிப்பிட்டு இருந்தார்.
அதனடிப்படையில் நிர்மல் குமார் மீது அவதூறு பரப்புவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார்கள் அளிக்கப்பட்டன. கலகம் செய்யத்தூண்டி விடுதல், பொது அமைதிக்கு எதிராக குற்றம் செய்யத்தூண்டுவது, வதந்தி பரப்புவது ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குத்தொடர்பாக நிர்மல் குமார் விசாரணைக்கு ஆஜர் ஆகும்படி சம்மன் அனுப்பப்பட்டு இருந்த நிலையில் இன்று (நவ.02) நிர்மல் குமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஆஜரானார்.
அவருடன் பாஜக ஆதரவாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் வந்ததால் காவல் ஆணையர் அலுவலகத்தின் முன்பு காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். விசாரணைக்காக நிர்மல் குமாரை மட்டும் அனுமதித்தனர். மற்றவர்களை அனுமதிக்கவில்லை. தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவில் நிர்மல் குமாரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ’ஒரு நிமிடம் வந்துட்டு போ..’ கோவை கார் வெடிப்பு தொடர்பான ஆடியோ வெளியானது..