தமிழ் கடவுள் முருகனையும், கந்த சஷ்டி கவசத்தையும் இழிவுபடுத்தியவர்களை கண்டிக்கும் வகையில், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனின் அறிவுரைப்படி, தமிழ்நாடு முழுவதும் 10 லட்சம் இல்லங்களில் ’வெற்றிவேல் வீரவேல்’ ஸ்டிக்கர் ஒட்டவும், ஒரு லட்சம் இல்லங்களுக்கு ’கந்த சஷ்டி கவசம்’ புத்தகம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, நேற்று (ஆகஸ்ட் 1) முதல் தமிழ்நாடு முழுவதும் பாஜக இளைஞரணி நிர்வாகிகளும், தொண்டர்களும் வீடு வீடாகச் சென்று ’வெற்றிவேல் வீரவேல்’ ஸ்டிக்கர்களை ஒட்டினார்கள். அதேபோல் ’கந்தசஷ்டி கவசம்’ புத்தகங்களையும் வழங்கினார்கள். இதனை பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் வினோஜ் ப.செல்வம், சென்னை துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வால்டாக்ஸ் ரோடு, அண்ணா பிள்ளை தெரு சந்திப்பில் உள்ள வீடுகளில் வெற்றிவேல் வீரவேல் ஸ்டிக்கரை ஒட்டி தொடங்கிவைத்தார். அதேபோல் கந்த சஷ்டி கவசம் புத்தகங்களையும் அவர் வீடுவீடாக சென்று வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் வினோஜ் ப. செல்வம் கூறுகையில், ”இந்து மதத்தை மட்டும் அல்ல, எந்த மதத்தை இழிவுபடுத்தினாலும் அதனை ஒருபோதும் பாஜக ஏற்றுக்கொள்ளாது. ஒட்டுமொத்த இந்துக்களின் மனங்களையும் புண்படுத்திய இந்த செயலுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை என்பது வேதனையான ஒன்று.
கறுப்பர் கூட்டத்தில் இருப்பவர்கள், திமுகவினர் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. திமுக இதன் பின்புலத்திலிருந்து இயக்கி உள்ளது. ஆகவேதான் இந்த இழி செயலை மு.க.ஸ்டாலின் கண்டிக்கவில்லை” என்றார்.
இதையும் படிங்க:'ஸ்டாலின் பெயரில் போலி கணக்கு; கறுப்பர் கூட்டத்திற்கு ஆதரவு ட்வீட்' - நீதிமன்றத்திற்குச் செல்லும் திமுக