சென்னை: சிறுபான்மை மக்கள் வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தி பாதுகாப்பு வழங்கவும், அரசியலமைப்பு சட்டப்படி மதச்சார்பின்மையை பாதுகாக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் நேற்று (ஜூன் 6) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், சி.பி.ஐ.எம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, நலக்குழுவின் தலைவர் எஸ்.நூர்முகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பேசிய திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், "மன்னர் ஆட்சிக் காலத்தில் அரசன் எப்படி வேண்டும் என்றாலும் ஆட்சி நடத்தலாம். ஆனால், மக்கள் ஆட்சி காலத்தில் அரசியலமைப்பு சட்டத்தின்படி தான் ஆட்சி நடத்த வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஒரே கடமை, சமூக பொருளாதாரத்தை பாதுகாப்பது மட்டும்தான்.
மதத்தில் தலையிடுவது அரசின் வேலை இல்லை. மதம் என்பது நமது அடிப்படை உரிமை. நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள உருவாக்கப்பட்டதுதான் அடிப்படை உரிமை. அடிப்படை உரிமைகளில் மாற்றம் கொண்டு வரக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு மதத்தை பிரச்சாரம் செய்வதற்கும், பரப்புவதற்கும் உரிமை இருக்கிறது. பாஜக அரசு இந்தியாவை இந்து நாடாக மாற்றுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறது. பாஜகவினர் நமக்கான ஆட்சியை நடத்துவதை விட்டுவிட்டு மத மோதல்களையும், குழப்பங்களையும் உருவாக்கி வளர்ச்சிகளை கெடுக்கின்றனர்.
நிதிநிலை அறிக்கையில் அரசு, மக்கள் நலன்சார்ந்த செயல்களை செய்திருக்கிறதா? மோடிக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் ஒரு புரிந்துகொள்ளும் தன்மை உள்ளது. பாஜக அரசு, ஓட்டு போட்ட மக்களை காப்பாற்றும் அரசாக இல்லை" என விமர்சித்தார்.
இதையும் படிங்க: 'இந்தி என்ன செய்யும்? இந்தி நம்மை சூத்திரனாக்கிவிடும்' - டிகேஎஸ் இளங்கோவன் பேச்சு