சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே கந்த சஷ்டி கவசத்தை அவமதிப்பு செய்த கறுப்பர் கூட்டத்தைக் கண்டித்து பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் பாஜக மாநில மீனவர் அணி தலைவர் சதீஷ்குமார், கலை இலக்கியப் பிரிவு தலைவர் நடிகை காயத்ரி ரகுராம், பாஜக கட்சி தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய கரு. நாகராஜன், "கறுப்பர் கூட்டம் 8 கோடி மக்கள் வணங்கும் முருகனையும், கந்த சஷ்டி கவசத்தையும் கொச்சைபடுத்தி அவதூறு பரப்பியுள்ளனர். தைப்பூச திருநாள் அன்று தமிழ்நாட்டில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று வழிபட்டு வருகின்றனர். இதுவரை எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கறுப்பர் கூட்டத்தைக் கண்டிக்காதது மன வேதனையை அளிக்கிறது.
8 கோடி மக்களின் ஓட்டு மட்டும் வேண்டும், ஆனால் அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள கடவுளைச் கொச்சைப்படுத்துகிற நபர்களைக் கண்டிக்கின்ற எண்ணம் துளி அளவு கூட இல்லை. மத விரோதப் போக்கை கடைப்பிடிக்கின்ற கட்சியாக திமுகவை நாங்கள் கருதுகிறோம். முருக பக்தர்கள் கந்த சஷ்டி திருநாளில் அவரவரது வீடுகளுக்கு முன்பாக மாலை 6 மணிக்கு முருகப்பெருமானின் படத்தையும் வேலையும் வைத்து பூஜை செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கறுப்பர் கூட்டத்தின் பின்னணியில் ஸ்டாலின்?': பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு