சென்னை: சென்னை மாநகராட்சியில் பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர் உமா ஆனந்தன் 134ஆவது வார்டில் வெற்றிபெற்றுள்ளார்.
சென்னை பெருநகர மாநகராட்சி 134ஆவது வார்டில் அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, பாமக, பாஜக கட்சிகள் உள்பட 12 பேர் வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். தேர்தல் பரப்புரையின்போது பாஜகவைச் சேர்ந்த வேட்பாளரான உமா ஆனந்தன் கோட்சே பற்றி பேசியது சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில் 134ஆவது வார்டில் 12 ஆயிரத்து 827 பேர் தங்கள் வாக்குகளைச் செலுத்தியிருந்தனர்.
காங்கிரசைவிட 2000-க்கும் மேல் அதிக வாக்குகள்
அவர்களில் பாஜகவைச் சார்ந்த வேட்பாளர் உமா ஆனந்தன் 5539 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். முன்னாள் மாமன்ற உறுப்பினரான காங்கிரஸ் கட்சியின் சுசீலா கோபாலகிருஷ்ணன் 3503 வாக்குகளைப்பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றார். அதிமுகவின் வேட்பாளர் அனுராதா 2695 வாக்குகள் பெற்றார்.
சென்னை பெருநகர மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
மேலும் தாமரை மலராது எனக் கூறி அவர்களுக்கிடையே தாமரை மலர்ந்து உள்ளது எனவும் பெருமிதத்துடன் உமா ஆனந்தன் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க:வெற்றிபெற்ற கையோடு திமுகவில் ஐக்கியமான அதிமுக வேட்பாளர்!