சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான பினாய் விஸ்வம் தமிழக மாநிலத் தலைவர் முத்தரன் இருவரும் தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய பினாய் விஸ்வம் ,
"பெட்ரோல் விலை உயர்வு போன்ற பல பிரச்சனைகளை நாடு சந்தித்து வருகிறது. மோடி அரசு மக்களுக்காக இல்லை. இது அதானிக்கும் அம்பானிக்கும் அவர்களின் ஆசைகளுக்காகவும் போராடிக் கொண்டு உள்ளது.
பேராசை தற்பொழுது ஒரு புது மதமாக மோடி அரசாங்கத்தில் மாறி உள்ளது. மோடியும் அவரது நிறுவனமும் லாபம் ஈட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். மோடி அரசு நாடு முழுவதும் வகுப்புவாத பதற்றத்தை உருவாக்கி வருகின்றது. அமித்ஷா சமீபத்தில் புதுச்சேரியில் உரையாற்றினார். அவரின் உரை முழுவதும் ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற போதனைகளே அதிகம். அமித்ஷாவின் இந்த பேச்சுக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.
2024 தேர்தலில் பாஜகவை எதிர்த்துப் போராட அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் கூட்டணி சேரும் என்று நாங்கள் நம்புகிறோம். தேர்தல் போரில் கேரளா, தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களுக்கு பெரிய பங்கு உண்டு. பாஜக கையில் கருவியாக ஆளுநர் வசிப்பிடமான ராஜ்பவன் உள்ளது. அனைத்து இடத்திலும் ராஜ்பவன் பாஜவின் அலுவலகமாக மாறி வருகிறது.
ஜஹாங்கிர்புரி சம்பவம் மக்கள் வீடு புல்டோசர்களால் இடிக்கப்பட்ட போது நாங்கள் அங்குள்ள மக்களை சந்திக்க விரும்பினோம் ஆனால் காவலர்களால் அனுமதி மறுக்கப்பட்டது. 100 கடைகள் புல்டோசர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. டெல்லி காவல்துறை நேரடியாக அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நாட்டில் வாழும் மக்களுக்கு இந்த நாட்டில் வாழ உரிமை உண்டு. இந்திய மக்களுக்கு அவர்கள் இடத்தில் வசிக்க உரிமை உண்டு . 2024 தேர்தலை எதிர்கொள்ள பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை திரட்டும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சியை வரவேற்கிறோம் "என தெரிவித்தார்.
பின்னர் பேசிய முத்தரசன் "ஏற்கனவே சாத்தன்குளத்தில் நடந்த லாக்அப் மரணம் போன்றே விக்னேஷ் சம்பவத்தைப் பார்க்கிறோம். அதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசுக்கு தெரிவிக்காமல் தமிழக ஆளுநர் ஊட்டியில் துணைவேந்தர் மாநாட்டை கூட்டினார். தமிழகத்தில் போட்டி ஆட்சியை ஆளுநர் செய்து வருகிறார். தமிழகத்தில் கவர்னர் தலைமையில் மத்திய அரசு போட்டி போட்டு ஆட்சி நடத்தி வருகிறது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:'தமிழ் இனத்தை சாதி, மதத்தால் பிரிப்பதைத் தமிழர்கள் அனுமதிக்கக்கூடாது' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்தார் விழாவில் பேச்சு