சென்னை: ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த தந்தையை காண வெங்கடேஷ் என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் கடந்த 1ஆம் தேதி மருத்துவமனைக்குச் சென்றார். உடல்நலக்குறைவால் இருந்த தந்தையை பார்த்துவிட்டு மீண்டும் வந்தபோது, அங்கிருந்த இருசக்கர வாகனம் மாயமாகி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனை தொடர்ந்து அவர் இது குறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், தனிப்படை காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கினர். இதில் முதற்கட்டமாக, மருத்துவமனை வளாகத்தில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், சந்தேகத்திற்கு இடமான நபர்களின் புகைப்படத்தை, மற்ற குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களோடு ஒப்பிட்டு பார்த்தபோது, சோழவரம் பகுதியில் ஸ்ரீதர் என்பவரை, தனிப்படை காவல் துறையினர் ஆதாரத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் சென்னை முழுவதும் பல்வேறு காவல் நிலைய பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடி விற்று வந்ததை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, தொடர்ந்து சென்னையில் திருடு போன இருசக்கர வாகன விவரம் குறித்து கூடுதலாக புலனாய்வு செய்த காவல் துறையினர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ராயபுரம், திருவொற்றியூர் போன்ற பகுதியில் திருடிய இருசக்கர வாகனத்தை மலிவான விலைக்கு விற்றதும் தெரியவந்தது.
இதில் குறிப்பாக ஹோண்டா ஆக்டிவா வாகனங்களை வெறும் 6 ஆயிரத்துக்கு விற்றதாகவும், அதே போல் புல்லட் போன்ற வாகனங்களை 22 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாகவும் தெரிவித்துள்ளார். விற்று வந்த பணத்தை, தனது காதலிக்கு கொடுத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் இருசக்கர வாகனத்தை விற்று கையில் அதிக பணம் வைத்திருந்தால் காவல் துறையினர் சோதனையில் சந்தேகம் ஏற்படும் என்ற அடிப்படையில் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பணத்தை செலவு செய்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் தனிப்படை காவல் துறையினர் ஸ்ரீதரின் தொடர்புடைய மற்ற நான்கு பேரை கைது செய்து 22 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். சென்னையில் பல்வேறு இடத்தில் திருடப்படும் இருசக்கர வாகனத்தை மிகவும் குறைந்த விலைக்கு விற்று வந்ததும், இரு சக்கர வாகனத்தை வாங்குபவர்களிடம், மாத தவணை சரியாக கட்டாத கடனாளியின் வாகனங்கள் எனக்கூறி விற்றதும் தெரிய வந்துள்ளது.
இதில் பிடிபட்ட அசாருதீன் தனியார் நிறுவன டெலிவரி ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது பாதுகாப்பில்லாமல் பொது இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள் குறிப்பாக அரசு மருத்துவமனைகள், பைக் பார்க்கிங் போன்ற இடங்களில் உள்ள வாகனங்களை நோட்டமிட்டு திருடுவது தெரியவந்துள்ளது.
தனது கூட்டாளிகளோடு இருசக்கர வாகனத்தில் சுற்றும் ஆசாருதீன் இதுபோன்று நிற்கும் வாகனங்களை திருடிச் செல்வது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. சென்னை முழுவதும் இது போன்று நோட்டமிட்டு இருசக்கர வாகனங்களை திருடி மலிவான விலைக்கு விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மாட்டுக்கறி புகைப்படத்திற்கு காவல்துறை போட்ட ட்வீட்; சர்ச்சையை தொடர்ந்து விளக்கம் - முழு விவரம்