சென்னை: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், திருமலைவாசன் நகர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் மகேஷ்(38). இவர் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 7ஆம் தேதி மகேஷ் அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்திலுள்ள பார்கிங் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார். பின்னர், மறுநாள் அங்கிருந்து அவரது இருசக்கர வாகனம் மாயமாகி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் மகேஷ் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை நடத்தினர். மேலும், அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் மகேஷின் இருசக்கர வாகனத்தை அதே குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வரும் வேலைக்கார பெண்ணான அண்ணனூர், தங்கவேல் தெருவைச் சார்ந்த ராதா (38) என்பவருடன் வரும் நபர் எடுத்து சென்றுள்ளது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அப்பெண்ணிடம் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியன. அதில், ராதா தான் வேலை செய்யும் அடுக்குமாடி குடியிருப்பில் மகேஷ் இருசக்கர வாகனத்தை சாவியுடன் விட்டு சென்றுள்ளார்.
இதனைக் கண்ட ராதா அந்த சாவியை எடுத்துக்கொண்டு தனது ஆண் நண்பரை வரவழைத்து அந்த சாவியை அவரிடம் கொடுத்து இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்லும்படி கூறியுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞர் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், ராதாவின் ஆண் நண்பர் குமரேசன் (28) என்பவர் என தெரியவந்தது. பின்னர் குமரேசனை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: போதை ஆசாமிகளுக்கு வலைவீச்சு