சென்னை: பரங்கிமலை ஈரோப்பியன் லேன் பகுதியைச் சேர்ந்தவர் மரியா ஜூலியானா (26). பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகப் பிரபலமான இவர் அமைந்தகரை காவல் நிலையத்தில் காதலன் மீது மோசடி புகார் ஒன்றை அளித்தார்.
அதில், "அமைந்தகரை அய்யாவு காலனி பகுதியைச் சேர்ந்தவர் மனிஷ் (26) அண்ணா நகர் இரண்டாவது வளாகத்திலுள்ள தனியார் சலூன் கடையில் பணியாற்றிவருகிறார்.
நாங்கள் நான்கு ஆண்டுகளாக மிக நெருக்கமாகக் காதலித்துவந்தோம். அவரும் என்னைத் திருமணம் செய்துகொள்வதாக நம்பவைத்தார். இதனால் மனிஷுக்கு இருசக்கர வாகனம், இரண்டு சவரனில் தங்கச் செயின், பிரிட்ஜ் என இரண்டு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரை செலவுசெய்தேன்.
ஆனால் மனிஷ் ஆகஸ்ட் 15ஆம் தேதி மதத்தைக் காரணம் காட்டி பெற்றோர்கள் சம்மதிக்க மறுப்பதாகத் தெரிவித்து காதலை முறித்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து மனிஷ் தொடர்ந்து தன்னிடம் மேலும் பணத்தைப் பெற தொல்லை கொடுத்துவருகிறார்.
இதனால் மன உளைச்சல் ஏற்படுகிறது. என்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றி பணம் பறித்த மனிஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் மனிஷிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: காவலர்களைக் காயப்படுத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது