'பிக்பாஸ் 3' சீசனில் பங்கேற்று பிரபலமடைந்த தர்ஷன், தன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகவும், திருமணம் செய்ய மறுத்ததோடு, சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்து தன்னையும் தன் குடும்பத்தையும் இழிவுபடுத்தியதாகவும் 'பிக்பாஸ் 4' சீசனின் போட்டியாளர் சனம் ஷெட்டி அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் பதிவுசெய்யப்பட்ட வழக்கில் தனக்கு முன்பிணை வழங்கக் கோரி தர்ஷன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார். அதில், தன்னை துன்புறுத்தும் நோக்குடன் சனம் ஷெட்டி பொய் புகார் அளித்துள்ளதால், தனக்கு முன்பிணை வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, தர்ஷனுக்கு நிபந்தனை பிணை வழங்கி உத்தரவிட்டார். இரு வாரங்களுக்கு தினமும் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என தர்ஷனுக்கு நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.