கிராமங்களில் அதிவேக இணைய சேவை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு சார்பாக பாரத்நெட் டெண்டர் விடப்பட்டது. இதில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளதாகத் தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் பாரத்நெட் டெண்டரில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கூறி மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் டெண்டரை ரத்து செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அறப்போர் இயக்கம் அளித்தப் புகாரினை காணொலிக் காட்சி வாயிலாக விசாரித்த மத்திய அரசு, பாரபட்சமாகவும், வேண்டிய சிலர் மட்டுமே கலந்து கொள்ளும் வகையிலும் விடப்பட்டுள்ள இரண்டாயிரம் கோடி ரூபாய் பாரத்நெட் டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்று நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை ஊழல், டெல்லி செங்கோட்டை வரை சந்தி சிரிக்கிறது. வெட்கித் தலை குனிய வேண்டியவர்கள், மீண்டும் மீண்டும் பொய்களைச் சொல்லி, பொதுமக்களை ஏமாற்றலாம் என வீண் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.
டெண்டரையே மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் ரத்து செய்திருப்பதால் - இதில் ஊழல் இல்லை; முறைகேடு இல்லை, மத்திய அரசு பாரத்நெட் திட்ட ஒப்பந்தப்புள்ளிகளுக்குத் தடை விதிக்கவில்லை எதிர்க்கட்சித் தலைவர் இட்டுக்கட்டி பொய்யாகக் குற்றம்சாட்டுகிறார் என்றெல்லாம் பச்சைப் பொய் சொன்ன தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், தற்போது ராஜினாமா செய்வாரா? அல்லது பணி நீக்கம் செய்யப்படுவாரா?
முறைகேடாக டெண்டர் விட்ட அலுவலர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும், டெண்டரில் முறைகேடு நடைபெற்றதற்கான முகாந்திரம் இல்லை என்ற லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அலுவலர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் முதலமைச்சர் உரிய, ஏற்கத் தகுந்த விளக்கத்தை மக்களுக்கு உடனடியாகத் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.