ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வட்டாரக் கல்வி அலுவலர் 2018 -19 ஆம் ஆண்டில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வருகின்ற ஜனவரி 9ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்பொழுது தங்கள் விண்ணப்பத்துடன் சான்றிதழ்களின் உண்மை நகல்களை பதிவேற்றம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே அறிவிப்பின் வழியாக படித்து உரிய விதிமுறைகளை தெரிந்துகொண்டு தேவையான அனைத்து சான்றிதழ்களையும் தவறாமல் பதிவேற்றம் செய்திட வேண்டும். தேர்வு அட்டவணை இறுதி நிலையில் உள்ளதால் எக்காரணத்தைக் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது.
உரிய காலத்திற்குள் விண்ணப்பங்களை உரிய கட்டணங்கள் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். 97 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள் தொடக்கக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் நியமனம் செய்யப்படவுள்ளனர். இவர்களுக்கான ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டு விதிகளின்படியே காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிப்பவர்கள் தங்களுக்கென பயன்பாட்டிலுள்ள இமெயில் முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் . இவர்களுக்கான எழுத்துத் தேர்வு 150 மதிப்பெண்களுக்கு மூன்று மணி நேரம் ஆன்லைன் முறையில் நடைபெறும்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து, தமிழ்நாட்டில் கிளர்ந்து எழும் மாணவர்கள்!