இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் கடல் மீனவர் மற்றும் மீனவ மகளிர் ஒருவர் தனது பங்குத் தொகையாக ஒன்பது மாதங்களில் மொத்தம் ரூ. 1500/- செலுத்துவர்.
பயனாளிகள் செலுத்தும் பங்குத் தொகைக்கு ஈடாக அரசு பங்குத் தொகையாக மொத்தம் ரூ.3000/- சேர்த்து மீன்பிடி குறைவு காலங்களில் நிவாரணத் தொகையாக மொத்தம் ரூ.4500/- பயனாளிகளுக்கு ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
மீனவர்களுக்கான அரசு பங்குத் தொகையை மத்திய மாநில அரசுகளும், மீனவ மகளிர் அரசு பங்குத் தொகை முழுவதையும் தமிழ்நாடு அரசும் ஏற்றுக் கொள்கிறது.
2019-20ஐம் ஆண்டில் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் 13 கடலோர மாவட்டங்களை சேர்ந்த இரண்டு லட்சம் கடல் மீனவர்களுக்கு அரசின் பங்குத் தொகையாக 60 கோடி ரூபாயும், 1.95 இலட்சம் கடல் மீனவ மகளிருக்கு அரசின் பங்குத் தொகையாக 58.65 கோடி ரூபாயும் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறே 2020-2ஆம் ஆண்டிற்கான சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகள் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில் புதிய மீனவர்கள் சேர்க்கையின்போது மாவட்ட ஆட்சியரின் மெய்தன்மை சான்று பெறப்பட வேண்டும். தற்போது வெளிநாடுகள் மற்றும் வேறு மாநிலங்களுக்கு சென்று, மீண்டும் சொந்த ஊர்களுக்கு திரும்பும் மீனவர்களும் மாவட்ட ஆட்சியர்களிடம் மெய்தன்மை சான்று பெற வேண்டிய நிலை உள்ளது.
பல்வேறு தரப்பு மீனவ பிரதிநிதிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று, மீனவர்கள் எளிதாக இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறும் வகையில், வெளிநாடுகள் மற்றும் வேறு மாநிலங்களுக்கு சென்ற மீனவர்கள் மூன்றாண்டுகளுக்குள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் பொழுது மாவட்ட ஆட்சித் தலைவரின் மெய்தன்மை சான்று இல்லாமலேயே சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.