ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வட்டாரக் கல்வி அலுவலர் 2018-19ஆம் ஆண்டில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு நவம்பர் 27ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுள்ள இணையான கல்வித்தகுதி விவரங்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் அறிவிப்பின் அடிப்படையில் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான தேதி மற்றும் கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும். விண்ணப்பிப்பதற்கான தேதி எக்காரணத்தைக் கொண்டும் நீட்டிக்கப்படாது என தெரிவித்தது.
வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கு பி.எஸ்சி, பி.ஏ இளங்கலை பட்டப்படிப்புடன் பிஎட் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு படித்து, பிஎட் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் உள்ளிட்ட பல பாடப்பிரிவுகளுக்கு தகுதியான பாடங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், பி.இ.,யுடன், பி.எட் முடித்தவர்கள் வட்டார கல்வி அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.
உயர் கல்வித் துறை சமீபத்தில் வெளியிட்ட தகுதியான பாடப்பிரிவுகள் குறித்த அரசாணையில் பிஇ, பிஎட் முடித்தால் 6, 7 ,8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பட்டதாரிகள் ஆசிரியர்களாகக் கணிதப்பாடம் எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 97 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள் தொடக்கக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் நியமனம் செய்யப்படவுள்ளனர். இதற்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளதால், தேதி பின்னர் அறிவிக்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்" என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பள்ளிகளில் திருடுபோன மடிக்கணினிகள் எத்தனை? - கணக்கு கேட்கும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை!