சென்னை: பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு நான்கு சுற்றுகளாக நடைபெற்று வருகின்றன. இதுவரை நடந்து முடிந்த கலந்தாய்வின் முடிவில் 89 ஆயிரத்து 187 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என தொழில்நுட்பக் கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.
கலந்தாய்வில் பங்கேற்ற 440 பொறியியல் கல்லூரிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்களில் 62 ஆயிரத்து 683 இடங்கள் காலியாக உள்ளன. பொதுப்பிரிவுக் கலந்தாய்வு நடந்து முடிந்துள்ள நிலையில் ஏழு கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை.
மேலும் ஏழு கல்லூரிகளில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாகவும், 51 கல்லூரிகளில் 10 விழுக்காட்டிற்கும் குறைவாகவும் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 16 பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே 100 விழுக்காடு இடங்களை மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.
4 சுற்றுகளாக கலந்தாய்வு
அரசுப் பள்ளியில் பயின்று இடஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கும், சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற்றது. தொழிற்கல்விப்பிரிவு மாணவர்களுக்கு செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரையிலும், பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 17 ஆம் தேதி வரையில் நான்கு சுற்றுகளாக நடைபெற்று வருகின்றன.
அதில் முதல்முறையாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டில் 7 ஆயிரத்து 324 மாணவர்களும், சிறப்பு பிரிவு மாணவர்கள் 473 பேரும், பொதுப்பிரிவு கலந்தாய்வு முதல் சுற்றில் 11 ஆயிரத்து 185 மாணவர்களும், இரண்டாவது சுற்றில் 20 ஆயிரத்து 363 மாணவர்களும், மூன்றாவது சுற்றில் 23 ஆயிரத்து 327மாணவர்களும், நான்காவது சுற்றில் 26 ஆயிரத்து 515 மாணவர்கள் என 89 ஆயிரத்து 187 மாணவர்கள் தங்களது இடங்களை தேர்வு செய்துள்ளனர்.
காலியிடங்களுக்கான துணைக் கலந்தாய்வு
பொதுப்பிரிவு கலந்தாய்வு முடிந்த பின்னர் காலியாக உள்ள இடங்களுக்கான துணைக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்விற்கு அக்டோபர் 19 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 20 ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
20, 21 ஆகியத் தேதிகளில் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவினை தேர்வுச் செய்யலாம். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு அக்டோபர் 22 ஆம் தேதி வெளியிடப்படும். இறுதி ஒதுக்கீடு பட்டியல் அடுத்த நாள் அக்டோபர் 23 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் உள்வாங்கிய கடல்!