சென்னை: பிபிசி 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த இஸ்லாமியர்கள் மீதான இனப்படுகொலையை அடிப்படையாக வைத்து ஆவணப்படத்தைத் தயாரித்திருந்தது. அந்த ஆவணப்படுத்தை வெளியிடும் சமூக ஊடகங்கள் பிளாக் செய்யப்பட்டு வருகின்றன. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், 26ஆம் தேதி சென்னை மாநிலக் கல்லூரியில் விக்டோரியா விடுதியில் மாணவர்கள் ஆவணப்படத்தை பார்த்துள்ளனர்.
சென்னை பல்கலைக்கழகத்தில் மாலை 3 மணிக்கு ஆவணப்படத்தை திரையிட இந்திய மாணவர் சங்கத்தின் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிலையில் இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி கூறும் பொழுது சென்னை பல்கலைக்கழகத்தில் எந்தவித ஆவணப்படத்தையும் வெளியிடுவதற்கு மாணவர்கள் தங்களிடம் அனுமதி பெறவில்லை பிபிசி தயாரித்துள்ள ஆவண படத்தை வெளியிடுவது குறித்து அரசின் வழிகாட்டுதல்படி செயல்படுவோம் என கூறினார்.
இதற்கு இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. அதில், சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் இந்நிகழ்விற்குத் தடை விதித்துள்ளது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. மேலும் இது அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 19-க்கு எதிரானதாகும்.
மாணவர்கள் இந்நிகழ்வைப் பல்கலைக்கழகத்தில் உள்ள எந்த ஒரு வகுப்பறையிலையோ அல்லது அரங்கத்திலேயோ பார்க்க ஏற்பாடு செய்யவில்லை. அவர்கள் வளாகத்தில் உள்ள திறந்தவெளியில் மாணவர்கள் தங்களது மடிக்கணினி மூலமாகப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.
ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் ஒருதலைப் பட்சமாக ஆர்எஸ்எஸ் இந்துத்துவா அமைப்புகளுக்கு ஆதரவாக இருந்து கொண்டு மாணவர் சங்கத்தின் பல்கலைக்கழக கிளை ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்விற்குத் தடை விதித்திருப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும் எனக் கூறியுள்ளனர். இந்நிலையில் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: திருமணத்திற்கு சென்ற போது விபத்து.. 3 குழந்தைகள் உயிரிழப்பு!