சென்னை: கணியாமூர் மாணவி இறப்பு தொடர்பான வழக்கில் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிபதி இளந்திரையன் உத்தரவில் மேலும் சில தகவல்களைப் பதிவு செய்துள்ளார். அதில், முதலில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, பின்னர் இந்திய தண்டனைச்சட்டத்தின் மைனர் பெண்ணை தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவு, போக்சோ சட்டம், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளை சேர்த்துள்ளனர்.
12ஆம் வகுப்பு என்பது மாணவர்களின் எதிர்காலத்துக்கு முக்கியமானது என்பதால், குடும்பச்சூழ்நிலை குறித்து சிந்திக்காமல், தன் மனதை படிப்பில் செலுத்தி, நன்றாகப் பிள்ளைகள் படிப்பார்கள் என்று பல பெற்றோர் தங்களது பிள்ளைகளை உறைவிடப் பள்ளியில் சேர்க்கின்றனர்.
மாணவி எழுதி வைத்துள்ள தற்கொலை கடிதத்தின்படி, மனுதாரர்கள் யாரும் தற்கொலைக்குத் தூண்டியதாக கூறவில்லை எனக் குறிப்பிட்டுள்ள நீதிபதி, நன்றாக படிக்கச்சொல்வது ஆசிரியர் பணியில் ஒரு அங்கமாகுமே தவிர, தற்கொலைக்கு தூண்டும் செயல் அல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
இரண்டு முறை செய்யப்பட்ட உடற்கூராய்வில் தமிழ்நாடு மருத்துவ குழு எடுத்த முடிவுகளை நீதிமன்றம் நியமித்த ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் குழு ஏற்றுக்கொள்வதாக அதன் அறிக்கையிலிருந்து தெரியவருகிறது. எனவே, மாணவி மரணத்திற்குக் காரணம் பாலியல் பலாத்காரமோ? அல்லது கொலையோ? இல்லை என உறுதியாவதாகவும், அவ்வாறு பெற்றோர் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உடற்கூராய்வுக்கான அறிக்கைக்கு மாறாக மாணவியின் பெற்றோர் கூறும் குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை எனவும் நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மாணவி மாடியிலிருந்து விழும்போது மரத்தில் அடிபட்டதாலேயே உடலின் பல பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் ஏற்பட்ட ரத்தக்கசிவுதான் உடலில் இருந்ததாக அறிக்கையில் இருந்து தெரியவருவதாகவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்தது மாணவி ரத்தத்தின் கறை அல்ல என்றும்; வண்ணப்பூச்சு என நிபுணர்களின் அறிக்கை கூறுவதாகவும் நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மாணவியின் தற்கொலை கடிதம், சக மாணவிகளின் சாட்சியம் ஆகியவற்றின் அடிப்படையில், வேதியியல் பாடம் படிப்பதில் சிரமப்பட்டு மாணவி உயிரிழந்திருந்தது உறுதியாகியுள்ளது.
அதே சமயம் இரு ஆசிரியைகள் அறிவுரை கூறிய நிலையில், தற்கொலைக்குத் தூண்டினார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, தற்கொலைக்குத் தூண்டிய பிரிவில் வழக்குப்பதிவு செய்ததும் தவறு என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி தூக்கிட்டு தற்கொலை