தற்போதைய நவீன உலகம் இயங்க எரிபொருளாக உள்ள கச்சா எண்ணெய் மெல்ல மெல்ல வற்றி வருகிறது. இவற்றை சமாளிக்கவும், வருங்கால சந்ததியினருக்கான தேவைகளை பூர்த்தி செய்வதில் பங்கெடுப்பதற்காகவும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எனப்படும் சூரிய மின் ஒளி, காற்றாலை, மின்சாரம் ஆகியவற்றை பயன்படுத்துவது கட்டாயமாகும் நிலை ஏற்படும் என்கின்றனர் நிபுணர்களும் தொழில்துறையினரும்.
அதுமட்டுமின்றி, கச்சா எண்ணெய் போன்ற எரிபொருட்களின் பயன்பாடு இயற்கைக்கும் பூமிக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதால் விரைவில் இத்தகைய எரிபொருள் பயன்பாட்டிலிருந்து, புதுப்பிக்கத்தக்க எரிபொருள் பயன்பாட்டிற்கு மாற வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கைகளும் எழுந்து வருகிறது.
தமிழ்நாடு, அந்த வகையில் புதுப்பிக்கதக்க ஆற்றலை பயன்படுத்துவதில் இந்திய அளவில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இருப்பினும், இங்கும் பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக சூரிய ஒளி மின்சார தகடுகள் விற்பனையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக பேசிய விகர் சோலார் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஜூட், "தமிழகத்தில் சூரிய மின் ஒளி பொருட்களுக்கு மானியம் வழங்கப்பட்டாலும் அவை முழுமையானதாக இல்லை. மின் ஒளி தகடுக்கு மானியம் வழங்கப்படுகிறது, ஆனால் பேட்டரிகளுக்கு மானியம் இல்லை. இதனால் இதுபோன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறும் மக்களுக்கு ஊக்கமில்லாமல் போகிறது.
அதுமட்டுமின்றி, தற்போது பயன்பாட்டில் உள்ள நெட் மீட்டரிங் முறையிலும் சில பிரச்னைகள் உள்ளன. தமிழ்நாட்டில் மாதம் சுமார் ஆறாயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தும் ஒரு வீட்டை சூரிய மின் ஒளிக்கு மாறினால் 2 முதல் 3 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய ஒளி இயந்திரங்கள் பொருத்த வேண்டும். இதற்கு தோராயமாக 1.50 லட்ச ரூபாய் செலவாகிறது. இதில் 30 விழுக்காடு தொகையை மத்திய அரசு மானியமாக வழங்குகிறது. இவை 25 ஆண்டு காலம் வரை நீடிக்கும் என உற்பத்தியாளர்கள் உறுதியளிக்கிறார்கள்.
இதன்மூலம், அந்த வீட்டில் 15 யூனிட் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஒரு யூனிட் மின்சாரத்துக்கு தமிழ்நாடு அரசு ஆறு ரூபாய் என்ற கணக்கில் வசூலிக்கிறது என்றாலும் ஓராண்டில் அந்தக் குடும்பம் 32 ஆயிரத்து 850 ரூபாய் வரை சேமிக்க முடியும். இதுபோல ஆண்டுக்கணக்கில் சூரிய ஒளியின் மூலம் கிடைக்கும் சேமிப்புகளை கணக்கிட்டுக்கொள்ளலாம்.
ஆனால், பிரச்னையே பயன்பாட்டில்தான் என்கிறார் ஜூட். சூரிய மின் ஒளி மூலம் பகல் நேரங்களில் அதிக எரிசக்தி கிடைக்கிறது. ஆனால் இரவு நேரங்களில் தான் மின் நுகர்வுக்கான தேவை அதிக அளவில் உள்ளது. முன்பு இருந்த நெட் மீட்டரிங் முறைப்படி, பொதுமக்கள் பகல் நேரத்தில் அதிக எரிசக்தி உற்பத்தி செய்தால் அதனை பொது மின்தொகுப்புக்கு ஏற்றுமதி செய்து அதற்கு ஏற்ப மின் கட்டணம் குறைக்கப்பட்டது.
ஆனால் தற்போது மின்சாரத்தை நுகரும் வாடிக்கையாளர்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படும் அதே வேளையில், சூரிய மின் ஒளியை ஏற்றுமதி செய்பவர்களுக்கு குறைந்த அளவு பணமே செலுத்தப்படுகிறது. இதனால் மக்களுக்க சூரிய மின் சக்தி பயன்படுத்துவது ஊக்கம் அளிக்கும் திட்டமாக அமையவில்லை.
மேலும், குறைந்த அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வீடுகளுக்கு இதுபோன்ற உபரி மின்சாரத்தை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டாலும், பெரிய அளவுக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலைகளுக்கும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இந்த திட்டம் கிடையாது. இதனால் இந்த திட்டம் பயனற்றதாக மாறிவிட்டது" என்கிறார்.
இதுஒருபுறம் இருக்க சூரிய மின்ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்பவர்களுக்கு அரசும், மின்சாரத் துறையும் போதிய ஒத்துழைப்பு தருவதில்லை என்ற புகாரும் பரவாலக உள்ளது. இதனால் தங்களுக்கு இழப்பு ஏற்படுவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கருதுவதாக சூரிய மின் ஒளி பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களும், இதனைப் பயன்படுத்தும் நுகர்வோரும் குற்றம்சாட்டுகின்றனர்.
சூரிய மின் உற்பத்தியில் அரசு கவனம் செலுத்துவதில்லை. உதாரணமாக, பெரிய வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும்போது அதில் 30 சதவிகித மின்சாரத் தேவையை சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. இருப்பினும், சென்னை பெருநகர வளர்ச்சி குழும அலுவலர்களே இதனை முறையாகப் பின்பற்றுவதில்லை. மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் கவர்ச்சிகரமானதாக இருந்தால் அவை களத்தில் முறையாக அமல்படுத்தப்படுவதில்லை.
2015ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் மூன்ராயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும் என கடந்த 2012ஆம் ஆண்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 2019ஆம் ஆண்டு வரை இந்த இலக்கை எட்டமுடியவில்லை. தமிழ்நாட்டில் இதுவரை இரண்டாயிரத்து 431 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் நிலையில், இது நிர்ணயித்த இலக்கில் 81 விழுக்காடு மட்டுமே.
2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தமிழக சூரிய மின் கொள்கையில், 2023ஆம் ஆண்டுக்குள் சூரிய ஒளி வாயிலாக 9 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், மூன்றாயிரத்து, 600 மெகாவாட் நுகர்வோரிடம் இருந்தும், ஐந்தாயிரத்து, 400 மெகாவாட் மின்சாரம் தனியார் நிறுவனங்களிடம் இருந்து தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் வாயிலாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அந்தக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாற்று எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்ட தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் தகவலின்படி, தமிழ்நாட்டில் 15 ஆயிரத்து, 799 மெகாவாட் மின்சாரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், காற்றாலை மூலமாக 8506.72 மெகாவாட் மின்சாரமும், கரும்பு சக்கை மூலமாக 710.90 மெகாவாட் மின்சாரமும், பயோமாஸ் மூலமாக 265.59 மெகாவாட் முன்சாரமும், தடுப்பணைகள் மூலமாக 2321.90 மெகாவாட் முன்சாரமும், சூரிய மின் ஒளி மூலமாக 3973.98 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.
வ.எண் | மின்சாரம் தயாரிக்க பயன்படுத்திய பொருள் (புதுப்பிக்கக்கூடிய எரிபொருள்) | கிடைத்த மின்சாரத்தின் அளவு (மெகாவாட் அளவில்) |
1 | காற்றாலை | 8506.72 MW |
2 | கரும்பு சக்கை | 710.90 MW |
3 | பயோமாஸ் (உயிரி எரிவாயு) | 265.59 MW |
4 | தடுப்பணை | 2321.90 MW |
5 | சூரிய ஒளி | 3973.98 MW |
| மொத்தம் | 15799 M W |
இது பற்றி பேசிய சூரிய பொருட்களை உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்றின் விற்பனை மற்றும் தொழில்நுட்பப் பிரிவு மேலாளர் வசந்த், "சூரிய மின் ஒளி தகடுகளின் விலை மிக அதிக அளவில் உள்ளதே இதுவரை சூரிய மின்சார பயன்பாடு அதிகரிக்காததற்கு காரணம். சூரிய மின்ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான முதலீடு அதிக அளவில் இருப்பதால் அனைத்து தரப்பினரும் இதனை வாங்க முடிவதில்லை.
அரசு மானியத்தைக் கொண்டு மட்டுமே ஒரு திட்டத்தை ஊக்குவிக்க நினைத்தால், அவை ஒருபோதும் இது மக்களிடம் சென்று சேராது. வரி, மானியம் போன்றவை பெரிய அளவில் மக்களிடம் பலனளிக்காது. இதனை அரசு குறைக்க முயற்சி செய்தாலே ஏராளமானவர்கள் இதனைப் பயன்படுத்துவர்" என்றார்.
இதையும் படிங்க: அதானி கிரீன் எனர்ஜியின் 20% பங்குகளை வாங்கிய டோட்டல் நிறுவனம்!