கரோனா ஊரடங்கால் கடந்த 50 நாள்களுக்கும் மேலாக வேலையின்றி தவிக்கும் 12,251 இளம் வழக்கறிஞர்களுக்கு தலா 4,000 ரூபாய் வீதம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் பலர் பங்களிப்புடன் நிதி வழங்கும் நிகழ்ச்சி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பார் கவுன்சில் அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர்கள் எம்.எம்.சுந்தரேஷ், கிருபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளிடம் அதற்கான காசோலைகளை வழங்கினர்.
பின்னர் பேசிய நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ், “ஊரடங்கு காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதில் வழக்கறிஞர்களும் அடங்குவர். கரோனா காலம் கடுமையானது என்றாலும், இனி வரும் காலம் அதை விடக் கடுமையானதாக இருக்கும். இனி வழக்குகளின் தன்மையும் வேறுவிதமாக இருக்கும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், திமுக மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான வில்சன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.