சென்னை பள்ளிக்கரணை அருகே சாலையில் அதிமுகவினர் வைத்த பேனர் விழுந்ததால் நேர்ந்த விபத்தில் சுபஸ்ரீ என்னும் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து பரங்கிமலை போக்குவரத்துப் புலனாய்வு போலீசார், 304அ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநர் மனோஜை முதல் குற்றவாளியாகவும் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்த்துள்ளனர்.
அதேபோல், அனுமதியின்றி பேனர் வைத்ததாகப் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் மாநகராட்சி அலுவலர்கள் அளித்தப் புகாரின் அடிப்படையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது சாலையில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக மற்றொரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். பேனரை அச்சிட்ட எஸ்.கொளத்தூரில் உள்ள சண்முகம் கிராஃபிக்ஸ் என்னும் பேனர் கடைக்கு சென்னை மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்துள்ளனர்.
இந்நிலையில், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சுபஸ்ரீயின் உடற்கூராய்வு செய்யப்பட்டு காலை சுமார் 10.30 மனியளவில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தத் துயர சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். பின்னர், அவரின் உடல் அவரது வீட்டிலிருந்து வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு குரோம்பேட்டையில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.