சட்டவிரோத பேனர்களை அகற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழ்நாடு அரசின் மீது டிராஃபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், நிர்மல் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேனர்கள் அச்சிடுவதைத் தடுக்க அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து பேனர் அச்சிடும் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் எஸ். ஆர். ராஜகோபால் தெரிவித்தார்.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அனுமதி இல்லாமல் பேனர்கள் வைக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிடத்தான் முடியும், பேனர்கள் அச்சிடுவதை அரசுதான் தடுக்க வேண்டும் என்றும், இது நீதிமன்றத்தின் வேலை இல்லை என்றும் தெரிவித்தனர்.
மேலும், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விஐபிக்கள் வைக்கும் பேனர்களை தினந்தோறும் சாலைகள் ஓரம் பார்க்க முடிவதாகக் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை 1ஆம் (திங்கட்கிழமை) தேதிக்கு ஒத்திவைத்தனர்.