அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த ஒரு மாதமாக உச்ச கட்டத்தை எட்டிய நிலையில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொது குழுவில் எடப்பாடி கே பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அன்று நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் தனது தரப்பிலிருந்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். இதில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது எனவும், தன்னை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் சட்டப்பேரவை சபாநாயகருக்கும் மற்றும் வங்கிகளுக்கும் கடிதம் எழுதி இருந்தார். ஒற்றை தலைமை விவகாரம் இறுதி வடிவம் பெறாமல் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க கூடாது எனவும், தற்போது வரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் தாம் தான் எனவும் கடிதம் எழுதி இருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஈபிஎஸ் தரப்பில் வங்கிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில் அதிமுகவின் பொதுக்குழுவில் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இனி வரும் காலங்களில் கட்சியின் வரவு செலவு கணக்குகளை அவர்தான் கவனித்துக் கொள்வார். இந்த பொதுக்குழு தீர்மானத்தை வங்கிகள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென கடிதம் அனுப்பி இருந்தார்.
இவரது கோரிக்கையை ஏற்று வங்கிகளும் திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு இது முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது. மேலும் ஓபிஎஸ் தரப்பில் பொதுக்குழு செல்லாது எனவும், பொதுக்குழுவில் ஏற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது எனவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை முடிக்கக் கூடாது: உயர் நீதிமன்றத்தில் வலியுறுத்தல்