தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி), முத்தையா சிதம்பரம் செட்டியாரால் 1937ஆம் ஆண்டு காரைக்குடி, சென்னை மற்றும் ரங்கூன் ஆகிய மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வரலாறு
பன்னாட்டு வங்கி மற்றும் அந்நியச் செலாவணி ஆகிய சேவைகளை மையமாக வைத்து, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தொடங்கப்பட்டது. அன்றைய காலக்கட்டத்தில் நகரத்தார் என அழைக்கப்படும் நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பர்மா உள்ளிட்ட நாடுகளில் சென்று வணிகத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையொட்டி, இந்த வங்கி சேவை தொடங்கப்பட்டு பின்னர் பல நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
சுதந்திரத்திற்கு பின்னர் 1969ஆம் ஆண்டில், நாட்டின் 14 முக்கிய வங்கிகள் நாட்டுடைமைக்கப்பட்டன. அதில் ஐஓபி வங்கியும் ஒன்று. மூக்கால் நூற்றாண்டைக் கடந்த பாரம்பரியமிக்க இந்த வங்கி, தற்போது தனியார்மயமாக்கப்படும் நிலையில் உள்ளது.
தனியார்மயமாகும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
கரோனா தொற்றால் நாட்டின் வரி வருவாய் குறைந்துள்ளது. இதை புதிய வழிகளில் சரிகட்டி, வருவாய் ஈட்டும் வகையில் ஒரு சில பொதுத்துறை வங்கிகளில் உள்ள பங்குகளை விற்பனை செய்வதோடு, இரண்டு பொதுத்துறை நிறுவனங்களை முழுமையாக தனியார்மயமாக்க முடிவு செய்துள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட்டில் உரையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், எந்த வங்கியை தனியார்மயமாக்கலாம் என்பது தொடர்பாக நிதி ஆயோக் அமைப்பு, மத்திய பங்கு விற்பனை துறை செயலாளர்கள் குழுவிடம் பரிந்துரை செய்துள்ளது. இதில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆப் மஹாராஷ்டிரா வங்கி ஆகியவை பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
தனியார்மயம் முட்டாள்தனமான முடிவு
வங்கியை தனியார்மயமாக்குவது இறுதியான முடிவு அல்ல; இது குறித்து செயலாளர்கள் குழு முடிவெடுத்து பின்னர் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும். இருப்பினும், நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த, பாரம்பரியமிக்க வங்கியை தனியார்மயாக்கும் முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேசிய பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா, ’இது முட்டாள்தனமான முடிவு’என விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், ”வளங்கள் இல்லை என்றால் ஏன் பெருநிறுவனங்களுக்கு வரி தள்ளுபடி வழங்க வேண்டும். 3.1 லட்சம் கோடி ரூபாய் பெருநிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. அதனை ஈடுகட்ட வேண்டும் என்பதால் பொதுத்துறை வங்கிகளை விற்பனை செய்கிறது.
வங்கி தனியார்மயமாக்கலால் கடன் வழங்கும்-பெறும் நடைமுறைகள் அடியோடும் மாறும். பொதுத்துறை வங்கிகளால்தான் விவசாயத்துறை, சிறு தொழில்களுக்கு கடன் கிடைக்கிறது. வங்கிகள் தனியார் மயமானால் ஊரக பகுதிகளுக்கு, வளர்ச்சி திட்டங்களுக்கு கடன் கிடைக்காது விவசாயிகளுக்கும், சிறு நிறுவனங்களுக்கும் கிடைக்காது. தனியார் வங்கிகள் பெரு நகரங்களில் தான் இருக்கின்றன. பொதுத்துறை வங்கிகள்தான் சாதாரண மக்களின் வளர்ச்சியில் உதவி வருகின்றன.
முன்னதாக, 1969ஆம் ஆண்டு வங்கிகள் அரசுடைமையாக்கப்படுவதற்கு முன்பாக பல தனியார் வங்கிகள் நட்டமடைந்து மூடப்பட்டன. அதன் பிறகு 1991ஆம் ஆண்டுக்குப் பிறகும் பல தனியார் வங்கிகள் மூடப்பட்டுள்ளன. அதன் பின்னர் பொதுத்துறை வங்கிகளும் கூட வருவாய் ஈட்டிதலில் கவனம் செலுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றன. இதனை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில், அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளும் தனியாரிடம் தாரை வார்க்கப்படுகின்றன” என்றார்.
இதையும் படிங்க: செம்மொழியான ‘தமிழ்மொழி’ எங்கே? ஒன்றிய அரசிடம் கேள்வியெழுப்பும் சு.வெ!