சென்னை போரூரை சேர்ந்தவர் வாணி கபிலன். இவர் கே.கே நகரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று (ஜூன்.24) மாலை கே.கே நகரிலிருந்து காரில் செல்லும் போது எதிர்பாராதவிதமாக காரின் மீது மரம் விழுந்ததில் அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் காரில் உடல் நசுங்கி பலியான வாணி கபிலன் குறித்த சுவாரஸ்யமான விவரங்கள் வெளியாகி உள்ளது. இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் மேலாளராக பல இடங்களில் பணியாற்றியவர் வாணி கபிலன். பெரியார் மீது அதிக ஈர்ப்பு கொண்ட வாணி தனது வலைத்தளத்தில் மதம் மனிதனை மிருகமாக்கும்! சாதி மனிதனை சாக்கடையாக்கும்! என்று பெரியாரின் வரிகளை வைத்துள்ளார்.
மேலும் வாணிக்கு தமிழ் மீது கொண்ட பற்றால் கவிதை தொகுப்புகளை எழுதி உள்ளார். குறிப்பாக கடந்த 1999ஆம் ஆண்டு அண்ணாசாலை வங்கியிலிருந்து பணி மாறுதல் கிடைக்கும் போது, ஊழியர்களுக்காக சிறப்புப் பரிசை வழங்குவதற்காக சக பணியாளர்களிடம் பிடிக்கும் குணங்களைப் பற்றி "பிடிக்கும்" என்ற தலைப்பில் கவிதை தொகுப்பு ஒன்றைப் பரிசாக அளித்தார்.
பெரும் பாராட்டை பெற்ற இந்த கவிதை அதுவே வாணியின் முதல் கவிதை தொகுப்பு. இதனை தொடர்ந்து மனிதர்கள் கூவம் நதியை மாசுபடுத்துவது குறித்து நிகழ்வு என தொடர்ந்து 54க்கும் மேற்பட்ட கவிதை தொகுப்புகளை வாணி எழுதி உள்ளார். குறிப்பாக யாரோ ஒருவர் செய்த அலட்சியத்தால் பெண் கவிஞர் வாணி பலியாகி இருக்கும் சோக சம்பவம் அரங்கேறி உள்ளது.
வாணியின் மரணத்திற்குப் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த அலட்சியத்திற்கு யார் காரணம் என்ற விசாரணையில் கே.கே நகர் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.