2001-2006ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் குடிசை மாற்று வாரிய இடத்தை குத்தகைக்கு பெற்று பள்ளி நடத்துவதற்காக கட்டடம் கட்டுவதாகக் கூறி பரோடா வங்கி, ரெப்கோ வங்கி ஆகியவற்றில் ரூ.2 கோடியே 25 லட்சம் கடன் வாங்கி அரசு ஒப்பந்தக்காரர் முத்தையா மோசடி செய்தார் என புகார் கூறப்பட்டது.
கடன் தொகையை சொந்த தொழிலுக்கு பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக முத்தையா மீதும், பரோடா வங்கி கே.கே.நகர் கிளை மேலாளராக இருந்த கைலாசம், ரெப்கோ வங்கி துணை பொது மேலாளர் ராமசாமி ஆகியோர் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
இந்நிலையில், வழக்கை விசாரித்த சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி ஜவஹர், ஒப்பந்ததாரர் முத்தையாவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.20 லட்சம் அபராதம் விதித்தார்.
அவருக்கு உதவியாக இருந்த பரோடா வங்கி மேலாளர் கைலாசத்துக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.15 லட்சம் அபராதமாக விதித்தார்,
ரெப்கோ வங்கி துணை பொது மேலாளர் ராமசாமி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். ஒப்பந்ததாரர் முத்தையா என்பவர் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவின் சித்தப்பா என்பது குறிப்பிடத்தக்கது.