ஐடிபிஐ வங்கி, இரண்டு பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் விற்பனை செய்யப்படும். எல்ஐசி பங்கு விற்பனைக்கான பணிகள் விரைவில் நடைபெறும். மேலும் ஒரு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகள் விற்பனை செய்யப்படும் என 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அதே போல், கரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் வங்கிகளில் வாராக்கடன் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ள நிலையில், இதனை சமாளிக்க 'பேட் பேங்க்' அமைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு வங்கி ஊழியர்கள் சங்கங்களைச் சேர்ந்த ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி, சென்னையில் வங்கி ஊழியர்கள் உணவு இடைவெளியில் போராட்டம் நடத்தினர். ஒருசிலர் வங்கி பணி நேரம் முடிந்த பின் போராட்டம் நடத்துவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளின் பங்கு விற்பனை தொடர்பாக அடுத்தகட்ட முடிவு எடுப்பதற்காக ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் வரும் 9 ஆம் தேதி ஹைதாரபாத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. இதில், அடுத்தகட்ட போராட்டம் குறித்த முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பேட் பேங்க் என்ற பெயரில் இந்திய நிறுவனங்களை அபகரிக்க வாய்ப்பு!