சென்னை மதுரவாயல் எம்எம்டிஏ காலனி பகுதியில் தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ஏடிஎம் மையத்திற்குள் கிருமிநாசினி தெளிப்பதுபோல் சென்று ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் காவல் துறையினர், அங்குள்ள கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்தனர். அதில், முகத்தில் முகமூடி அணிந்துவந்த நபர், ஏடிஎம் இயந்திரத்தை உடைக்காமல் சாவி போட்டு சுலபமாக திருடிச்சென்றது பதிவாகிருந்தது.
இதனைக் கண்ட காவல் துறையினர், வங்கியில் பணிபுரிபவர்களே இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், வங்கியில் பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளில் இருப்பவர் வங்கி ஊழியர் சிவானந்தன் (36), போல் இருப்பதாகவும் தற்போது அவர் அம்பத்தூர் வங்கி கிளையில் பணிபுரிவதாகவும் வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, அம்பத்தூர் வங்கிக் கிளைக்குச் சென்ற காவல் துறையினர், சிவானந்தத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது, முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறிய அவர், பின்னர் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.
மேலும், இவருக்கு மாதந்தோறும் வீட்டுகடன், வாகனம் என மாதத்தவணை அதிக அளவில் உள்ளதால் பணத்தின் தேவைக்காக ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடித்ததாகத் தெரிவித்தார். இதையடுத்து, அவரைக் கைது செய்த காவல் துறையினர், அவர் கொள்ளையடித்த ஒன்பது லட்சம் ரூபாயைப் பறிமுதல் செய்தனர்.