திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் அக்டோபர் இரண்டாம் தேதி சுவற்றில் துளையிட்டு 16 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஏழு தனிப்படைகள் அமைத்து திருச்சி காவல் துறையினர் தேடிய நிலையில் முக்கிய குற்றவாளியான திருவாரூர் முருகன் பெங்களூரு நகர நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதனையடுத்து முருகனை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பெங்களூரு அருகே பொம்மனஹள்ளி காவல் துறையினர் மற்றொரு வழக்கில் விசாரிப்பதற்காக முருகனை நீதிமன்றத்தில் இருந்து காவல் துறையின் காவலில் எடுத்தனர். அப்பொழுது முருகன் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் குறித்து அளித்த தகவல் அடிப்படையில் பெங்களூர் காவல்துறையினர் மூன்று தினங்களுக்கு முன்பு திருச்சி காவிரி கரையோரம் உள்ள ஒரு காட்டு பகுதிக்குள் சென்று ஆய்வு செய்ததில் 11 கிலோ தங்க நகைகளை மீட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று கர்நாடகா காவல்துறையை தடுத்து நிறுத்தி மீட்கப்பட்ட நகைகள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்துக் கொண்டனர். தற்போது மீட்கப்பட்ட நகைகள் குறித்து பொம்மனஹள்ளி காவல் துறையினர் ஆய்வு செய்துவருகின்றனர்.
மேலும், ஐந்து கோடி மதிப்பிலான 11 கிலோ தங்க நகைகள், இரண்டு சொகுசு கார்கள் மீட்கப்பட்டுள்ளது. எனவே, கைது செய்யப்பட்ட முருகனுக்கு திருவெறும்பூர் பஞ்சாப் நேஷனல் வங்கி உட்பட பல்வேறு கொள்ளை சம்பவங்களில் தொடர்புள்ளது என்றும் பெங்களூர் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.