சென்னை: ஆதிபராசக்தி கோயிலில் பெண்கள் கருவறை சென்று பூஜை செய்யலாம் எனவும், மாதவிடாய் காலத்திலும் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்யலாம் என்ற வழிமுறைகளை அறிமுகம் செய்தவர், பங்காரு அடிகளார். செங்கல்பட்டு பகுதியில் சுப்பிரமணி என்ற இயற்பெயருடன் அரசு ஆசிரியர் பயிற்சி மையத்தில் படித்து, அச்சரப்பாக்கத்தில் ஆசிரியராக தனது பணியைத் தொடங்கினார்.
முன்னதாக, குடும்ப நிகழ்வில் பங்காரு அடிகளாருக்கு அருள் வந்ததாகவும், அதைத்தொடர்ந்து வீட்டின் பின்புறம் சிறிய கொட்டகை அமைத்து ஆன்மீகத்தில் ஈடுபட்டு, மக்களுக்கு அருள் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. 1970களின் தொடக்கத்தில் கொட்டகை சிறிய கோயிலாக கட்டபட்டது.
மேல்மருவத்தூரில் கட்டப்பட்ட கோயிலில் நடைபெறக்கூடிய நிகழ்வுகள், தமிழகம் முழுவதும் வாய்வழி செய்திகளாகவும், ஊடகங்கள் மூலமாகவும் பரவத் தொடங்கின. கோயிலுக்கு வரும் பக்தர்கள் தெய்வத்தின் மறு உருவமாக பங்காரு அடிகாளரைப் பார்த்ததால் பக்தர்களால் “அம்மா” என்று அழைக்கப்பட்டார்.
இதுவரை 7,000க்கும் மேற்பட்ட ஆதிபராசக்தி வழிபாடு மன்றங்களை தமிழகத்தில் தொடங்கி உள்ளார். அடுத்தகாக, இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் 10 நாடுகளில் வழிபாடு மன்றங்கள் செயல்படுவதாக அறக்கட்டளை இணையத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆன்மீகம் மட்டுமல்லாது, சமுதாயத் தொண்டையும் ஆற்றிவந்த பங்காரு அடிகாளருக்கு, மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு “பத்மஸ்ரீ விருது” வழங்கியது.
பங்காரு அடிகளாரின் புரட்சி: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு பெண்கள் மாலை அணிந்து வரும் வழிமுறையை பங்காரு அடிகளார் கொண்டு வந்தார். 80, 90களில் முதல் பெண்கள் அதிகம் கோயிலுக்கு வரத் தொடங்கியதால், மேல்மருவத்தூர் கோயில் பெண்களுக்கான கோயில் என்ற பெயரையும் பெற்றது.
தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களில் இருந்தும் பெண்கள் வருவர். குறிப்பாக மாதவிடாய் காலத்தில் கூட பெண்கள் தெய்வத்திற்கு சேவைகளை செய்யலாம், அதனால் தெய்வத்திற்கு சக்தி ஒன்றும் போய்விடாது என்று அவர் கூறினார்.
பெண்கள் மட்டுமன்றி அனைத்து சாதி, மதத்தினரும் கோயில் கருவறை வரை சென்று வழிபடலாம் என்று 30 ஆண்டுகளுக்கு முன்னரே கூறி, அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கினார். பாலின மற்றும் சாதி, மத வேறுபாடுகளைக் களைந்து முன்மாதிரி கோயிலாக மேல்மருவத்தூர் கோயிலை அறிமுகப்படுத்தினார்.
பங்காரு அடிகளார் ஆன்மீகப் புரட்சியுடன் கல்விப் புரட்சியையும் செய்தார். பங்காரு அடிகளாரைப் பற்றி ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை பேராசிரியர் திருநாவுக்கரசு கூறியதாவது, ‘ பங்காரு அடிகளார் வரலாறும், அரசியலும் சேர்ந்து உருவாக்கபட்ட ஒரு ஆன்மீகத் தலைவர். 1970க்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஆன்மீகத் தலைவராகவும், ஆன்மீகவாதியாகவும் இருந்தவர், பங்காரு அடிகளார்.
ஒரு ஆண் என்பவன் பெண்ணின் மற்றொரு உருவம்தானே தவிர, வேறு ஒன்றும் இல்லை என்பதை உணர்த்தி, பெண்களை கோயிலுக்குள் வரவழைத்து சமூக புரட்சியை செய்தவர். தாந்தரீக மரபுப்படி, பெண் என்பவள் மாதவிடாய் ஏற்பட்டால் அசுத்தம் என்று பொருள்படுவது மிகப்பெரிய அபத்தமான கூற்று என்பதை நவீன உலகிற்கு உணர்த்தியவர்.
குறிப்பாக, தமிழக அரசியல் தலைவர் முதல் தேசியத் தலைவர்கள் வரை பங்காரு அடிகளாரைச் சந்திக்காத ஆளே இல்லை. இதில் 1986இல் ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகிய இருவருமே பங்காரு அடிகளாரின் உலக அமைதிக்காக நடத்திய யாகத்தில் கலந்து கொண்டனர்.
ஒரு குறிப்பிட்ட காலம் வரை அனைத்து அரசியல் தலைவர்களும் அவரை நேரில் சந்தித்து வந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட சமூகம் அவரை பின் தொடர்ந்து இருக்கிறது என்று அறிந்த பிறகு விலகத் தொடங்கினர். குறிப்பாக, 2000க்குப் பின்னர் நிறைய அரசியல் தலைவர்கள் சந்திப்பதை தவிர்த்தனர்.
பங்காரு அடிகளார் நான் குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவன் என்று அவர் குறிப்பிட்டது கிடையாது. தன்னை எப்போதுமே ஒரு ஆன்மீகவாதியாகத்தான் வெளிப்படுத்திக் கொண்டார். அதே போல, தான் ஒரு ஆன்மீகவாதி என்பதால் எந்தவொரு ஆன்மீக சொற்பொழிவு எங்கேயும் ஆற்றியதே கிடையாது. பக்தி மார்க்கமும், யோக மார்க்கமும்தான் முக்திக்கு என மிக தெளிவாக அதன் வழி சென்றவர்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:பங்காரு அடிகளார் மறைவு; பிரதமர் இரங்கல் - ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நேரில் அஞ்சலி!