சென்னை: கரோனா தொற்று காரணமாகப் பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளி, கல்லூரிகள் இன்று (செப்.1) முதல் திறக்கப்பட்டது.
வழக்கமாகக் கல்லூரிகள் திறக்கப்படும்போது பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கல்லூரி, மாநிலக் கல்லூரி மாணவர்கள் சிலர் 'ரூட் தல' என்ற பெயரில், அந்த வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளில் பாடல் பாடியும், பேருந்தின் மேல் ஏறியும் அட்டகாசத்தில் ஈடுபட்டு "பஸ் டே" (Bus day) கொண்டாடுவது வழக்கமானது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், 'பஸ் டே' கொண்டாடப்படுவதால், அதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனாலும், தடையை மீறி ஒரு சில மாணவர்கள் 'பஸ் டேவை' கொண்டாடி வந்தனர்.
தீவிரக் கண்காணிப்பு
இந்நிலையில், இன்று கல்லூரிகள் திறக்கப்படுவதால் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 53 எண் கொண்ட பேருந்தில் 'பஸ் டே' கொண்டாட இருப்பதாகப் போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் ஒரு சில மாணவர்கள் 'பஸ் டே' கொண்டாட்டத்தில் ஈடுபடப் போவதாக நுண்ணறிவுப் பிரிவு காவல் துறையினர் அலெர்ட் கொடுத்துள்ளனர்.
அதனடிப்படையில் மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கல்லூரிகளில் காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதேபோல் 'பஸ் டே' கொண்டாடக்கூடிய பேருந்துகளின் ரூட்டை பட்டியலிட்டு, அங்கு ரோந்து காவல் துறையினரும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தடையை மீறி 'பஸ் டே' கொண்டாட்டத்தில் ஈடுபடக்கூடிய மாணவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் - அமைச்சர் முத்துசாமி