சென்னை, தி.நகர் மகாலட்சுமி தெருவில் வசித்து வருபவர் பிரசாந்த் (32). இவர் அதே பகுதியில் ஜெயின் பேக்கரி என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். மேலும் ஆன்லைன் மூலமாகவும் பேக்கரி பொருட்களை விநியோகம் செய்யும் இவர், வாடிக்கையாளர்களுக்காக வாட்ஸ்அப் குழு ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் பொருட்களை விற்று வருகிறார்.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ள சூழலில், டெல்லி சமய மாநாட்டில் கலந்துகொண்ட இஸ்லாமியர்கள் மூலமாகத் தமிழ்நாட்டில் தொற்று பரவி வருவதாக சமூக வலைதளங்களில் சிலர் பொய்த் தகவல்களைப் பரப்பி வருகின்றனர். மேலும், இஸ்லாமியர்கள் பணிபுரியக் கூடிய இறைச்சி, பேக்கரி போன்ற பொருட்களைப் பொதுமக்கள் ஒருவரும் வாங்கி சாப்பிட்டு விட வேண்டாம் என்றும் அவதூறான கருத்துகளைப் பரப்பி வந்தனர்.
இந்த நிலையில், பிரசாந்த் தனது வாட்ஸ்அப் குழுக்களில் பேக்கரி பொருட்கள் அனைத்தையும் ஜெயினர்கள் தயாரிப்பதாகவும், இஸ்லாமியத் தொழிலாளர்கள் இல்லை என்ற பதிவுடன் விளம்பரம் செய்துள்ளார். இதனைக் கண்ட இஸ்லாமியர்கள் சிலர், இந்தப் பதிவில் இஸ்லாமியர்களைப் பற்றி தவறாகக் குறிப்பிட்டுள்ளதாகக் கூறி மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரசாந்த்தை கைது செய்துள்ளனர்.. மேலும் இவரிடம் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : மலேசியாவில் தவித்த 177 தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தனர்