சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர், மருத்துவர் சைமன் ஹெர்குலஸ். இவர், கடந்த ஏப்ரல் மாதம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய வேலங்காடு மயானத்துக்கு எடுத்து சென்றபோது அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கலவரத்தில் ஈடுபட்டதோடு அவசர ஊர்தியையும் தாக்கி சேதப்படுத்தினர்.
இதுகுறித்து அண்ணா நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிர்மலா உள்பட 14 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
குண்டர் சட்டத்தில் அவரை சிறையில் அடைத்த உத்தரவை ஆய்வு செய்த அறிவுரை கழகம், நிர்மலா மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்தது.
இதைத்தொடர்ந்து நிர்மலா, பிணை கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.செல்வக்குமார், சாட்சிகளை கலைக்கக்கூடாது, தலைமறைவாகக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கி உத்தரவிட்டார்.