சென்னை: திருவொற்றியூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பத்மநாபன் (41). இவர் ஐ.ஓ.சி.யில் டேங்கர் லாரியை ஓட்டும் பணி செய்துவருகிறார். இவருக்கும், ஜெயலட்சுமி (40) என்பவருக்கும் 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இது மூன்றாவது திருமணமாகும். இவர்கள் இரண்டு குழந்தைகளுடன் வசித்துவந்தனர்.
முன்னதாக ஜெயலட்சுமிக்கு பால்வண்ணன் என்பவருடன் முதல் திருமணம் நடைபெற்றது. பால்வண்ணன் பிரிந்துசென்ற பின் ஜெயலட்சுமி துரைராஜ் என்பவரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு பவித்ரா (13) என்ற பெண் பிள்ளை இருந்தது.இதையடுத்து துரைராஜும் பிரிந்துசென்றார். இதையடுத்து பத்மநாபன் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் பத்மநாபனுக்கும், ஜெயலட்சுமிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
மகளைக் கொளுத்திய தாய்
நேற்று முன்தினம் (ஜனவரி 30) இரவு 10 மணி அளவில் ஜெயலட்சுமியிடம் பத்மநாபன், 'நீ ஒருவருடன் (அதே பகுதியைச் சேர்ந்தவர்) தொடர்பில் இருக்கிறாய்' என்று சந்தேகப்பட்டுத் திட்டியுள்ளார். மேலும், அவருடன் தொடர்பில் இல்லை என்றால் உன் மகள் பவித்ரா மீது சத்தியம் செய் என்று வற்புறுத்தியுள்ளார்.தன் மகள் இருப்பதால்தானே இந்தப் பிரச்சினை என்று நினைத்த ஜெயலட்சுமி விரக்தியில் பவித்ரா மீது மண்ணெண்ணெயை ஊற்றி ஜெயலட்சுமி கொளுத்தியுள்ளார்.
பவித்ராவின் உடலில் தீப்பற்றவே வலியால் கதறி அழுது உள்ளார். அவரைக் காப்பாற்ற இரண்டு பேரும் போர்வை போட்டு அணைக்க முயன்றுள்ளனர். மேலும், அக்கம்பக்கத்தினர் திருவொற்றியூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
உயிரிழந்த பவித்ரா
உடனடியாக காவல் ஆய்வாளர் ஷீலா மேரி தலைமையில் காவல் துறையினர், பவித்ராவை மீட்டு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்குச் சிகிச்சை அளிக்க முடியாது என்பதால் ஸ்டான்லி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு 78 விழுக்காடு தீக்காயத்துடன் கவலைக்கிடமான நிலையில் பவித்ரா சிகிச்சைப் பெற்றுவந்தார்.
பவித்ராவிடம் நீதிபதி கிருஷ்ணன் வாக்குமூலம் பெற்றுள்ளார்.இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவம் பெற்றுவந்த பவித்ரா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
காவல்துறை விசாரணை இது தொடர்பாக, திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சுதாகர் வழக்குப்பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட ஜெயலட்சுமி, அவருடைய மூன்றாவது கணவரான பத்மநாபன் ஆகியோரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : அரசுப் பேருந்து - கார் நேருக்கு நேர் மோதி விபத்து: கணவன், மனைவி உயிரிழப்பு