பி.இ., பி.டெக் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான பொது கலந்தாய்வு இன்று முதல் அக். 28ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்த கலந்தாய்விற்கு 1 லட்சத்து 10 ஆயிரத்து 873 மாணவர்கள் கலந்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தொழிற்கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வும் இன்று முதல் அக்.16ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இதில் ஆயிரத்து 533 மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கலந்தாய்வில் ஒரு லட்சத்து 63 ஆயிரம் இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க https://www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பொது கலந்தாய்வின் முதல் சுற்றில் தரவரிசைப் பட்டியலில் 199.75 முதல் 175 வரையில் கட் ஆப் மதிப்பெண் பெற்ற 12 ஆயிரத்து 263 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் தொழிற்கல்விப் பாடப்பிரிவில் தரவரிசைப் பட்டியலில் 196.83 முதல் 87.5 வரையில் கட் ஆப் மதிப்பெண் பெற்ற ஆயிரத்து 533 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று முதல் அக்.11ஆம் தேதிக்குள் கட்டணங்களை செலுத்தி, 12,13 ஆகிய தேதிகளில் தாங்கள் விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவினை பதிவு செய்யலாம். அக்.14ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
அக்.14, 15 ஆகிய தேதிகளில் தற்காலிக ஒதுக்கீட்டு இடங்களை உறுதி செய்த பின்னர், அக். 16ஆம் தேதி இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படுகிறது. ஓசி, பி.சி., எம்.பி.சி, பி.சி.எம் பிரிவு மாணவர்கள் கட்டணமாக 5 ஆயிரம் ரூபாயும், எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவு மாணவர்கள் கட்டணமாக ஆயிரம் ரூபாயும் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "பொறியியல் படிப்பில் சேர அதிக மாணவர்கள் விண்ணப்பம்" - அமைச்சர் கே.பி அன்பழகன்