சென்னை மாநகராட்சியில் 2016ஆம் ஆண்டு முதல் 4,5,6,10,13 ஆகிய மண்டலங்களில் ஆயுஷ் மருந்தகம் (ஆயுர்வேதம், யோகா, நேச்சுரோபதி, யுனானி, சித்தா, ஹோமியோபதி) இயங்கிவருகிறது. இந்த மருந்தகங்களில் காலியாக உள்ள மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்களை ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்த தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திடம் (SECURITY AGENCY) மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த பணியாளர்களுக்கு மூன்று மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி தரமணி பகுதியில் மார்ச் 12ஆம் தேதி கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மேயர் பிரியா கலந்துகொண்டார். அப்போது பிரியா ஆயுஷ் மருந்தகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த முகாமிற்கு சென்ற போது, அங்கிருந்த ஆயுஷ் பணியாளர்கள் இருவர் மண்டியிட்டு, நிலுவை சம்பளத்தை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதைக்கேட்ட பிரியா முதலில் எழுந்து சுயமரியாதையுடன் தங்களது கோரிக்கையைக் கேட்கும்படி கூறி, உரிய நடவடிக்கையை எடுப்பதாக உறுதியளித்ததார். (ஆயுஷ் மருந்தங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் தேவையான மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்களை ஓராண்டுக் காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்த தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திடம் (SECURITY AGENCY) மாநகராட்சி ஒப்பந்தம் வழங்கியது சட்டத்துக்கு எதிரானது, இதை முதலில் சொன்னது ஈ டிவி பாரத் என்பது குறிப்பிடத்தக்கது)