சென்னை மண்டல ரயில்வே காவல் துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அதில், "அயோத்தி வழக்கை முன்னிட்டு சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பாதுகாப்புப் பணிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. ரயில்வே காவல் துறை தொடர்ச்சியாக ரயில் நடைப்பாதைகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பயணிகள் எந்தவிதமான அச்சுறுத்தல்களுமின்றி பாதுகாப்பாக பயணிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலுள்ள ரயில் நிலையங்களில் சுமார் 2 ஆயிரம் ரயில்வே காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 500 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.
பயணிகள் அவர்களது உடைமைகளை முழுவதுமாக பரிசோதித்த பின் அனுமதிக்கப்படுகின்றனர். இதன் தொடர்ச்சியாக சிசிடிவி கேமராக்கள் மூலமாக கண்காணித்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.
இதன்பின்னர், தென்னக ரயில்வே மத்திய மண்டல பாதுகாப்பு ஆணையர் ஷாம் பிரசாத் , "சென்னை முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் மத்திய ரயில்வே பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தண்டவாளங்கள், ரயில் நிலையங்களில் மோப்ப நாய் உதவியிடன் சோதனை நடத்தப்படுகிறது. இதேபோன்று வெடிகுண்டு நிபுணர்களும் சோதனை பணியில் ஈடுபட்டுள்ளனர்'' என்று கூறினார்.
இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:
'இனி பாஜகவால் அரசியல் செய்ய முடியாது' - காங்கிரஸ் கடும் விமர்சனம்!