சென்னை : மேற்கு மாம்பலத்தில் ‘ஸ்ரீராம் சமாஜ்’ என்ற அமைப்பின் மூலம் அயோத்யா மண்டபம் 1954ஆம் ஆண்டு கட்டப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்தது. அந்த அமைப்பு நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாகப் புகார்கள் எழுந்த நிலையில், அயோத்யா மண்டபத்தை கடந்த 2013ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் கொண்டுவந்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து ’ராம சமாஜம்’ அமைப்பு சார்பில், கடந்த 2014ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி வி.எம். வேலுமணி உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து ’ஸ்ரீராம் சமாஜ்’ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ’ஸ்ரீராம் சமாஜம்’ சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அயோத்தியா மண்டப நிர்வாகத்தை எடுத்து அரசு நிர்வகிக்கும் உத்தரவை எதிர்த்த வழக்கில், அரசுத்தரப்பில் எந்த பதில்மனுவும் தாக்கல் செய்யப்படாத நிலையில் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், எந்த காரணமும் இல்லாமல் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர்,’ ’ஸ்ரீராம் சமாஜத்தின்’ பள்ளி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; மதரீதியான நடவடிக்கைகள் நடந்ததால் அரசு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்று தீர்வு உள்ளது என தனி நீதிபதி முன் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது’’ என்றார்.
மேலும் பல வகைகளில் நிதி வசூலித்த இந்த அமைப்பு வருவாய் விவரங்களை அலுவலர்களிடம் தெரிவிக்கவில்லை எனும் உத்தரவை எதிர்த்து எப்போது வேண்டுமானாலும் அலுவலர்களிடம் மேல் முறையீடு செய்யலாம் எனவும் குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி மாற்றுத்தீர்வு உள்ளது எனக்கூறி பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது; தனியார் அமைப்பான ஸ்ரீராம் சமாஜத்தின் நடவடிக்கைகளில் அரசு தலையிட முடியாது எனத் தெரிவித்தார்.
2014ஆம் ஆண்டு இடைக்கால உத்தரவு வழங்கிவிட்டு, 8 ஆண்டுகளுக்குப்பின் மாற்றுத் தீர்வு காணலாம் எனக்கூற முடியாது எனத்தெரிவித்த தலைமை நீதிபதி குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கமளிக்கும்படி அனுப்பிய நோட்டீஸில் எந்த விவரங்களும் கூறப்படவில்லை என தெரிவித்தார்.
குற்றச்சாட்டுகளுக்கு முறையாக விளக்கம் கேட்டு தமிழ்நாடு அரசு விசாரிக்கலாம் விசாரணையின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவித்த நீதிபதிகள் அயோத்தியா மண்டபத்தை அரசு எடுத்த உத்தரவையும்; அந்த உத்தரவை உறுதி செய்த தனி நீதிபதியின் உத்தரவையும் ரத்து செய்ய இருப்பதாகத் தெரிவித்து அயோத்தியா மண்டபத்தை மீண்டும் ஸ்ரீராம் சமாஜம் வசம் ஒப்படைக்க இருப்பதாகக் கூறி, வழக்கின் தீர்ப்பை நாளைக்கு (ஏப்ரல் 27) தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க:'அணில் பிரச்னையை விடுங்க..., அணிலை அடிச்சு சாப்பிட்டாச்சு' - கலகலப்பாக பேசிய சபாநாயகர் அப்பாவு