தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் ஒன்றாகக் கூடுவதைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி வீட்டிற்கே நேரடியாகக் காய்கறிகளை விநியோகம் செய்யும் விநியோகஸ்தர்களின் விவரங்கள் ஆவடியில் உள்ள 48 வார்டுகளில் பகுதிவாரியாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அறிக்கையில், "ஆவடி மாநகராட்சியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகளின் எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் இந்தத் தகவல் அனுப்பப்படும். சுகாதாரப் பணிக்காகச் செல்லும் ஊழியர் வாயிலாகவும் இந்தத் தகவல் தெரிவிக்கப்படும்.
இதன்மூலம் பொதுமக்கள் வீட்டிலிருந்து தொலைபேசி மூலம் சம்பந்தப்பட்ட கடைகளை தொடர்புகொண்டு காய்கறிகளை ஆர்டர் செய்தால் உரிய விலைக்கு வீட்டிற்கே கொண்டுவந்து விநியோகம் செய்யப்படும்.
அடுத்தகட்டமாக ஆவடியில் உள்ள மளிகைக் கடைகளும் கணக்கெடுக்கப்பட்டுவருகின்றன. விரைவில் மளிகை பொருள்களும் வீட்டிற்கே விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காரணமில்லாமல் பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளிவருவதைத் தவிர்க்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கூறியிருப்பதாவது, "ஆவடியில் கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும்பொருட்டு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், தற்போது காய்கறிகளை வீட்டிற்கு விநியோகம் செய்யும்முறை மூலம் பொதுமக்கள் பெருமளவில் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஆவடியில் பாதுகாப்புத் துறை பணியாளர்களுக்கு முகக் கவசம் தயாரிக்கும் பணி!